பிரிட்டன் இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் வரும் நாளை (மே 19) நடக்கவுள்ளது. கோலாகலமாக நடக்க இருக்கும் அந்த திருமணம் குறித்த 5 தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து உள்ளூர் நேரப்படி வரும் சனிக்கிழமை மதியம் வின்ஸ்டரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடக்க உள்ளது. இந்த தேவாலயத்தில்தான் இளவரசர் ஞானஸ்நானம் பெற்றார்.
திருமணத்திற்கு ஏறத்தாழ 600 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் அன்று மாலை நடக்க இருக்கும் திருமண வரவேற்புக்கு தனியாக 200 பேர் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
திருமணத்திற்கு வருபவர்கள் என்ன மாதிரி உடை அணிய வேண்டும் என்பது அழைப்பிதழிலேயே விவரிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் கோட் சூட்டும், பெண்கள் தொப்பியுடன் கூடிய நீண்ட கவுனும் அணிய வேண்டும்.
பிரிட்டனில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் அலெக்ஸி லுபொமிர்ஸ்கிதான் இந்த திருமணத்தின் அதிகாரபூர்வ புகைப்பட கலைஞர். ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் நிச்சயதார்த்த புகைப்படத்தையும் இவர்தான் எடுத்தார்.
ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணத்தை நடத்தி வைக்கப்போவது கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி.