புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் 44 பேர் பலியானதால் ஒட்டுமொத்த இந்திய மக்களும் பாகிஸ்தான் மீது கடுங்கோபத்தில் இருந்தனர். பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி, பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்க தடை உள்பட பல அதிரடி நடவடிக்கைகளும் இந்திய தரப்பில் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த சவுதி அரேபியா இளவரசர் சல்மான், பாகிஸ்தான் நாட்டில் 20 பில்லியன் டாலர் புதிய முதலீடு செய்வதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கன் வேண்டுகோளின்படி பல்வேறு குற்றச்செயல்களுக்காக சவுதி அரேபியா சிறையில் இருக்கும் 2107 பாகிஸ்தானிய கைதிகளை விடுதலை செய்யவும் ஒப்புக்கொண்டார். சவுதி அரேபிய இளவரசரின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இன்று சவுதி அரேபிய இளவரசர் சல்மான் இன்று டெல்லி வருகிறார். அவர் இன்று பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இன்றைய சந்திப்பின்போது சவுதி அரேபியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தீவிரவாத எதிர்ப்பு, பணப்பரிமாறம் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வது , உளவுத்துறை தகவல்களைப் பரிமாறிக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து இரு நாட்டிற்கு இடையே நெருக்கமான நட்புறவுக்கு வித்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.