தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி காலை 8:49 மணிக்கு கிரீஸின் கடலோரத்தில், 77 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் நடந்தது. ஜெர்மனியில் உள்ள புவியியல் ஆய்வுக் நிறுவனம் இதன் ரிக்டர் அளவை 6.0 என்று அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அந்த பகுதியிலுள்ள கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை வழங்கப்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் கடலோரத்தில் உள்ள மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
கடந்த வாரம், கிரீஸின் காசோஸ் தீவில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தின் நில அதிர்வு ஆய்வகம் வழங்கியுள்ள தகவலின்படி, இந்த வருடம் ஜனவரி 26 முதல் பிப்ரவரி 13 வரை கிரீஸின் சைக்லேட்ஸ் தீவுகளில் 18,400 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவாகி உள்ளன.
இந்த நிலநடுக்க சம்பவங்கள் கிரீஸ் நாட்டின் புவியியல் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிக்கின்றன. அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் தொடர்ந்து நிலத்தடி நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கை அறிவிப்புகளை பின்பற்றி பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.