அமெரிக்க அரசின் கப்பல்களுக்கு பனாமா கால்வாயில் செல்ல கட்டணம் இல்லை என்று அமெரிக்க வெளியூர் துறை அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பை மறுத்த பணமா அரசு, வழக்கம் போல் கட்டணம் வசூல் செய்வோம் என்று தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலை இணைக்கும் பனாமா கால்வாய், அமெரிக்காவின் நிதியில் கட்டப்பட்டது. பின்னர், 1999 ஆம் ஆண்டு, இந்த கால்வாய் பனாமா நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப், "அமெரிக்க மக்களின் வரி பணத்தில் கட்டப்பட்ட கால்வாயில், அமெரிக்க கப்பல்கள் செல்ல கட்டணமா?" என்ற கேள்வி எழுப்பியிருந்தார். இதன் பின்னணியில், அமெரிக்க வெளியூர் துறை செயலாளர் கடந்த வாரம் பனாமா நாட்டுக்கு சென்று திரும்பினார்.
அதன் பின்னர், அமெரிக்க அரசு வெளியிட்ட அறிவிப்பில், பனாமா கால்வாய் வழியாக செல்லும் அமெரிக்க அரசு கப்பல்களுக்கும் போர் கப்பல்களுக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலை பனாமா கால்வாய் ஆணையம் மறுத்துள்ளது.
பனாமா கால்வாய் வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிப்பதற்கும், விலக்கு அளிப்பதற்கும், பனாமா கால்வாய் ஆணையத்துக்கு மட்டுமே உரிமை உள்ளது. "நாங்கள் எங்களுடைய கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை" என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில், அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.