பாகிஸ்தானிற்கு அளிக்கும் நிதியுதவியை அமெரிக்கா அதிபர் டிரம்ப் நிறுத்தியதால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் அரசு, அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் அரசை கடுமையாக சாடினார். அதில் தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் ஏராளமான நிதி உதவிகளை பெற்று பயனடைந்து வந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக 33 பில்லியன் டாலர்களை பாகிஸ்தானிற்கு நிதியாக அளித்துள்ளோம். ஆனால் அவர்கள் திருப்பிக் கொடுத்தோ பொய்யும், துரோகமும் தான் எனவும் அமெரிக்க தலைவர்களை பாகிஸ்தான் அரசு முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறது என்றார். அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுக்கு இருப்பிடமளித்து, அவர்களை வளர்க்கும் செயலை பாகிஸ்தான் செய்து வருகிறது. இனியும் இதனை அனுமதிக்க மாட்டோம் என்று டிரம்ப் அதிரடியாக தெரிவித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு துறை செயலர் டெஹமினா ஜான்ஜூவா செய்தியாளர்களிடம் பேசுகையில், டிரம்ப்பின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதர் டேவிட் ஹாலேவுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளோம் என்றார்.