வெளிநாட்டுக்கு வேலை நிமித்தமாக செல்லும் பாகிஸ்தானியர்கள் பெரும்பாலும் அங்கு பிச்சை எடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் பின்னணியில், சுமார் 53 ஆயிரம் பாஸ்போர்ட்களை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை முடக்கியுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியா, அரபு அமீரகம், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள், பாகிஸ்தான் அரசிடம் “உங்கள் நாட்டிலிருந்து ஏராளமானோர் வந்து பிச்சை எடுக்கிறார்கள்” என்றும், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தங்கள் நாட்டில் பிச்சை எடுப்பது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்களை சவுதி அரேபியா நாடு கடத்தியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவானதை அடுத்து, பாகிஸ்தான் அரசு தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.
வெளிநாடுகளில் இருந்து தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்ட 53 ஆயிரம் பாகிஸ்தானியர்களின் பாஸ்போர்ட்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுப்பது தங்கள் நாட்டின் மதிப்பை தாழ்த்துகிறது என்றும், இனிமேல் பாஸ்போர்ட் பெறுவதற்கு சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே, வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் பாகிஸ்தானியர்களின் விசாக்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.