பல்வேறு நாடுகளின் சிறைகளில் மொத்தமாக 23 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
குற்றவியல் சம்பவங்களில் சிக்கி சவுதி அரேபியாவில் மட்டும் 12,156 பேர் சிறையில் இருக்கிறார்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 5,292 பேர், பஹ்ரைனில் 450 பேர், சீனாவில் சுமார் 400 பேர், கத்தாரில் 338 பேர், ஓமனில் 309 பேர் மற்றும் மலேசியாவில் 255 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல், கொலை, பாலியல் குற்றங்கள், வழிப்பறி, போலியான நாணயம் அச்சிடல், பண மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை, குற்றவாளிகளின் எண்ணிக்கை குறித்து விரிவாக தகவல் அளித்தது. தங்கள் குடிமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த விவரங்கள் பாகிஸ்தானில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. வெளிநாடுகளில் பாகிஸ்தானின் இளையதலைமுறையினர் குற்றச்செயல்களில் ஈடுபடுவது குறித்து பல பாகிஸ்தானியர்கள் தங்கள் கவலையை தெரிவித்து வருகின்றனர்.