Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் தாலிபன் ஆட்சியில் ஒரு மாதம்: மக்களின் வாழ்க்கை எப்படி உள்ளது?

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (23:39 IST)
உஸ்பெகிஸ்தானுடனான ஆப்கானிஸ்தான் எல்லையில் இருக்கும் ரயில் பாலத்தில் ஒரு சரக்கு ரயில், "ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்" என்ற பெயரில் தாலிபன் தமது நாட்டின் பெயரை அறிவித்த பிறகு, அதன் ஆளுகைக்குள் முதல் முறையாக நுழைகிறது. தாலிபன்களின் வெள்ளை மற்றும் கறுப்பு நிற கொடி, உஸ்பெக் கொடிக்கு அருகே பறக்கிறது. தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வந்ததை சில வர்த்தகர்கள் வரவேற்கிறார்கள்.
 
"ஊழல் நிறைந்த போலீஸ் அதிகாரிகளுக்கு அவர்களின் சோதனைச் சாவடிகளைக் கடக்கும்போதெல்லாம் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை," என்று கோதுமை ஏற்றப்பட்ட ஒரு டிரக்கின் டிரைவர் என்னிடம் தெரிவித்தார்.
 
"என்னால் இனி காபூலுக்குச் ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்காமல் செல்ல முடியும்," என்று அவர் கூறினார்.
 
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றி சரியாக ஒரு மாதம் ஆகிறது. இப்போது அங்கு நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது. மேலும், தீவிர பொருளாதார நெருக்கடியையும் அந்நாடு எதிர்கொண்டு வருகிறது.
 
ஆப்கானிஸ்தான் இறக்குமதியாளர்கள் புதிய சரக்குகளுக்கு பணம் செலுத்த முடியாததால், வர்த்தகம் குறிப்பிடத்தக்க வகையில், குறைந்து விட்டதாக வணிக சமூகத்தின் ஒரு வட்டாரம் என்னிடம் தெரிவித்தது.
 
ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி வந்த பிறகு மாறிய 5 பெண்களின் வாழ்க்கை
உலகின் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் நரேந்திர மோதி, ஜோ பைடன், தாலிபன் 
 
ஹைரட்டான் துறைமுகத்தில் தாலிபன் சுங்கத்துறை தலைவர் மெளலவீ சயீத், வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக வரி விகிதங்களைக் தாலிபன் குறைப்பதாகவும், பணக்கார வர்த்தகர்களை நாடு திரும்ப ஊக்குவிக்க விரும்புவதாகவும் கூறுகிறார்.
 
"இது மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதற்காக வணிகர்களுக்கு அவர்களின் பிற்கால வாழ்க்கையில் வெகுமதி அளிக்கப்படும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
ஒரு மணி நேர பயணத்தில், நாட்டின் நான்காவது பெரிய நகரமான மஸார்-இ-ஷரீப் உள்ளது. அங்கு மேலோட்டமாகப் பார்த்தால் வாழ்க்கை இயல்பாக செல்வது போலத் தெரிகிறது. இருப்பினும் பலர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
நான் நகரின் கலாசார அடிநாதமாக கருதப்படும் நீல நிற ஓடுகள் பதிக்கப்பட்ட மசூதிக்கு( Blue Mosque) சென்றேன். தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றுவதற்கு சற்று முன்பாக ஆகஸ்ட் மாதத்தில் நான் கடைசியாக அங்கு சென்றிருந்தேன். அப்போது, அங்குள்ள மைதானம், செல்ஃபிக்காக போஸ் கொடுக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களால் நிரம்பியிருந்தது.
 
ஆனால் இப்போது தாலிபன்கள் பாலின அடிப்படையில் தொழுகை நேரங்களை ஒதுக்கியுள்ளனர்: பெண்கள் காலையில் வரலாம். மற்ற நேரங்களில் ஆண்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நாங்கள் சென்றபோது, ஏராளமான பெண்கள் அங்கு வந்திருப்பதை பார்த்தோம். ஆனால் எண்ணிக்கை முன்பை விட குறிப்பிட்டத்தக்க வகையில் குறைந்திருந்தது.
 
"இங்குள்ள விஷயங்கள் சரியாக போய்க்கொண்டிருக்கின்றன. ஆனாலும் புதிய ஆளுகையுடன் ஒத்துப்போக மக்களுக்கு இன்னும் சில காலம் தேவைப்படலாம்," என்று ஒரு பெண் பயந்தபடி குறிப்பிட்டார்.
 
இங்கு செல்வாக்கு மிக்க உள்ளூர் தாலிபன் தலைவரான ஹாஜி ஹெக்மத்தை நான் சந்தித்தேன். "நீங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்கலாம். ஆனால், இங்குள்ள கலாசாரத்தை நீங்கள் அழித்து விட்டதாக உங்களுடைய விமர்சகர்கள் கூறுகிறார்களே?" என்று நான் அவரிடம் கேட்டேன்.
 
"அப்படி கிடையாது" என்று மறுத்த அவர், "கடந்த 20 ஆண்டுகளாக மேற்கத்திய தாக்கங்கள் இங்கே உள்ளன. கடந்த 40 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாடு, ஒரு வெளிநாட்டின் கையிலிருந்து மற்றொரு நாட்டின் கைக்கு மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. நாங்கள் எங்கள் சொந்த மரபுகள் மற்றும் மதிப்புகளை இழந்து விட்டோம். நாங்கள் எங்கள் கலாசாரத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.
 
இஸ்லாத்தைப் பற்றிய அவரது புரிதலின்படி, ஆண்களையும் பெண்களையும் சமூகத்தில் கலந்து பழக அனுமதிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
 
ஹாஜி ஹெக்மத்: "கடந்த 20 ஆண்டுகளாக மேற்கத்திய தாக்கங்கள் இங்கே உள்ளன... நாங்கள் எங்கள் கலாசாரத்துக்கு புத்துயிர் கொடுக்கிறோம்"
 
தாலிபனுக்கு மக்களின் ஆதரவு இருப்பதாக ஹாஜி ஹெக்மத் உண்மையாக நம்புகிறார். இருப்பினும், அவரது காதுக்கு கேட்காத தூரத்தில் ஒரு பெண் பார்வையாளர் தனது தோழியிடம், "இவர்கள் நல்லவர்கள் அல்ல" என்று கிசுகிசுத்தார்.
 
தாலிபனின் இஸ்லாம் பற்றிய விளக்கம் கிராமப்புறங்களிலும், சமூக பழமைவாத ஊரகப்பகுதிகளிலும் நிலவும் மதிப்புகளுடன் குறைவாக முரண்படக்கூடும். ஆனால் ஆப்கானிஸ்தானின் பெரிய நகரங்களில் பலரும் இந்த அமைப்பை சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றனர். இதற்கு பல வருட "தவறான பிரசாரம்" தான் காரணம் என்று ஹாஜி ஹெக்மத் கூறுகிறார்.
 
ஆனால் நகர்ப்புறங்களில் தற்கொலை குண்டுவெடிப்பு மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொலைகளின் வரலாறும் இதற்கு பொறுப்பாகும்.
 
நாங்கள் நீல மசூதியை விட்டு வெளியேறும்போது, பிரதான சாலையில் ஒரு பெரிய மற்றும் உற்சாகமான கூட்டத்தை பார்த்தோம். அவர்களைத் தாண்டி நாங்கள் சென்றோம். அங்கு துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்த நான்கு சடலங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒரு உடலின் மீது கையால் எழுதப்பட்ட சிறிய குறிப்பு இருந்தது. அதில் 'இவர்கள் கடத்தல்காரர்கள்' என்றும் 'மற்ற கிரிமினல்களுக்கும் தண்டனை இதே போலத்தான் இருக்கும்' என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
கடுமையான வெயில் காரணமாக உடல்களிலிருந்து துர்நாற்றம் வீசும்போதிலும் கூட்டம் புகைப்படங்களை எடுப்பதையும், நன்றாக பார்ப்பதற்காக ஒருவரை ஒருவர் முண்டியடித்து முன்னே செல்வதையும் பார்க்க முடிந்தது. ஆப்கானிஸ்தானின் பெரிய நகரங்களில் வன்முறை குற்றங்கள் நீண்ட காலமாக ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது.
 
தாலிபன்கள் பாதுகாப்பை மேம்படுத்தியிருப்பதாக, அந்த அமைப்பின் விமர்சகர்கள்கூட தெரிவிக்கின்றனர். "அவர்கள் கடத்தல்காரர்களாக இருந்தால் அது ஒரு நல்ல விஷயம். அது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்."என்று ஒரு பார்வையாளர் எங்களிடம் கூறினார்.
 
ஆனால் நகரத்தில் உள்ள வேறு பலரும் பாதுகாப்பாக உணரவில்லை. "நான் என் வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும் தாலிபன்களைப் பார்க்கும்போது பயத்தில் நடுங்குகிறேன்" என்று சட்டக்கல்லூரி மாணவி ஃபர்சானா எங்களிடம் தெரிவித்தார்.
 
அவர் கல்வி பயில்வது போன்ற தனியார் பல்கலைக்கழகங்கள் திறந்துள்ளன. ஆனால் அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்கள் இப்போதைக்கு மூடப்பட்டுள்ளன. புதிய தாலிபன் ஆட்சியின் கீழ், ஒரே வகுப்பறையில் படிக்கும் ஆண் மற்றும் பெண் மாணவர்கள் திரைச்சீலை மூலம் பிரிக்கப்பட வேண்டும்.
 
ஃபர்சானாவைப் பொருத்தவரை, அது முன்னுரிமை அல்ல. தாலிபன்கள் பெண்களை வேலை செய்ய அனுமதிக்கமாட்டார்கள் என்று அவர் கவலைப்படுகிறார். ஆனால் தாலிபன்கள் தொடர்ந்து இதை மறுத்துவருகின்றனர். ஆசிரியைகள் அல்லது மருத்துவர்கள் அல்லாத பெண்கள், தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக இப்போதைக்கு வீட்டிலேயே இருக்கும்படி கூறப்படுள்ளனர்.
 
ஆண் மற்றும் பெண் பல்கலைக்கழக மாணவர்கள் திரைசீலை மூலம் பிரிக்கப்பட்டுள்ளனர்.
 
"இப்போது நான் நம்பிக்கையற்றவளாக உணர்கிறேன். ஆனால் எதிர்காலத்திற்காக நம்பிக்கையுடன் இருக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன்" என்று ஃபர்சானா கூறுகிறார்.
 
கடந்த முறை தாலிபன்கள் ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் இந்தமுறை செய்துள்ளதை விட மிகவும் கட்டுப்பாடான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியிருந்தனர். உதாரணமாக ஆண் துணை இல்லாமல் ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறுவதை தடை செய்திருந்தனர். ஆப்கானிஸ்தான் நகரங்களில் இன்றுள்ள பரவலான அச்சம், இதேபோன்ற சட்டங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என்பதுதான்.
 
நாட்டின் உறுதியான கட்டுப்பாடு தாலிபன்களிடம் இருந்தாலும், அவர்கள் மக்களின் மனதை இன்னும் வெல்லவில்லை. ஹாஜி ஹெக்மத் இதை ஒப்புக்கொள்கிறார். "நாட்டை ராணுவ ரீதியாகக் கைப்பற்றுவது கடினமாக இருந்தது. ஆனால் சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்துவது மற்றும் அதைப் பாதுகாப்பது மேலும் கடினமானது."என்கிறார் அவர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!

லெபனான் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்..!

மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. ஆளுநருடன் சந்திப்பு!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments