உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வரை தினமும் ஒரு லட்சம் அதிகரித்த நிலையில் தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சமாக இருந்த நிலையில் இன்று 30 லட்சத்தை நெருங்கிவிட்டது. உலகம் முழுவதும் 2,994,761 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 206,992 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 87 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்களில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் தான் கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகமாகியுள்ளது. நியூயார்க் நகரில் கொரோனா தொற்று நோயால் 37 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். அதேபோல் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான மருத்துவக் கப்பலான யு எஸ் என் எஸ் கம்போர்ட் கப்பலில் 182 பேர் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து அந்த கப்பலை முழுவதும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் 226,629 பேர்களுக்கும், இத்தாலியில் 197,675 பேர்களுக்கும், பிரான்ஸில் 162,100 பேர்களுக்கும், ஜெர்மனியில் 157,770 பேர்களுக்கும், இங்கிலாந்தில் 152,840 பேர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது