கேரள மாநிலத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு நேற்று வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் முரளிதரன் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் வாடிகானில் போப்பாண்டவரை சந்தித்த அமைச்சர் முரளிதரன், பகவத் கீதை மற்றும் யானை மரச்சிலை ஆகியவற்றை பரிசாக கொடுத்தார். இதனை போப்பாண்டவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.
கேரள மாநிலம் திருச்சூரில் 1876-ம் ஆண்டு பிறந்தவர் மரியம் திரேசியா கடந்த 1914-ம் ஆண்டு புனித குடும்பத்தின் சகோதரிகள் என்ற பெயரில் சபை ஒன்றை நிறுவி அதன் மூலம் ஏழை, எளியோருக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வந்தார்.
மரியம் அவர்களின் பொதுச்சேவையை பாராட்டி அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக போப்பாண்டவர் சமீபத்தில் அறிவித்தார். அதன்படி நேற்று அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
மரியம் திரேசியா, கடந்த 1926-ம் ஆண்டு தனது 50-வது வயதில் மரணமடைந்தார் என்பதும், வாடிகானில் புனிதர் பட்டம் பெறும் கேரளாவின் நான்காவது நபர் மரியம் என்பதும் குறிப்பிடத்தக்கது