ஜோர்டானில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 4000 சுற்றுலாப் பயணிகள் பழம்பெரும் நகரான பெட்ராவை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தலைநகர் அமானின் தென் மேற்கு பகுதியில் உள்ள மடாபாவில், காரில் அடித்துச் செல்லப்பட்ட ஐந்து பேரை மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடி வருகின்றனர்.
அக்கபா நகரில் பெய்த மழையால் அங்கு அவசர நிலை ஏற்பட்டுள்ளது. சாக்கடலில் ஏற்பட்ட வெள்ளத்தில் குழந்தைகள் உட்பட 21 பேர் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அமானின் டாபா பிராந்தியத்தில் வெள்ளத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும் என ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலைநகருடன் நாட்டின் தெற்கு பகுதியை இணைக்கும் முக்கிய சாலை ஒன்றும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பெட்ராவில் வெள்ள நீர் 4 மீட்டர் உயரம் எழுந்ததாக அரசு தொலைக்காட்சி தெரிவிக்கிறது.
வெளியேற்றப்பட்ட சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அரசின் செய்தித் தொடர்பாளர் ஜுமானா தெரிவித்துள்ளார்.
மேலும், சனிக்கிழமையன்று கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களை வீடுகளை விட்டு வெளியேற வற்புறுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜோர்டானில் சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. பள்ளிச் சுற்றுலாவுக்கு சென்ற 18 குழந்தைகள் மழையில் அடித்துச் செல்லப்பட்டது குறித்து மக்கள் கண்டனங்களை எழுப்பியதால் நாட்டின் கல்வி அமைச்சரும், சுற்றுலாத் துறை அமைச்சரும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.