காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய கடுமையான வான்வழி தாக்குதலில், குழந்தைகள் உட்பட சுமார் 80 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல், நிவாரண முகாம்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று தராஜ் மாவட்டத்தில் உள்ள பிராஸ் சந்தையில் நடத்தப்பட்ட குண்டுவீச்சில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். உதவிப் பொருட்கள் வாங்க வரிசையில் காத்திருந்த மக்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்த நிலையில், தெற்கு காசாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஏராளமான உடல்கள் கொண்டுவரப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல்கள் ஹமாஸ் போராளிகளை இலக்காக கொண்டவை என இஸ்ரேல் கூறினாலும், அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டு வருவதாக காசா சுகாதாரத் துறையும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகமும் குற்றம் சாட்டியுள்ளன.
உணவு மற்றும் உதவிகளுக்காகக் காத்திருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது மனித உரிமை மீறல் என்றும் சர்வதேச அளவில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.