ஈராக்கில் உள்ள மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில் ராமர் மற்றும் அனுமனின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளதை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்தியாவின் பண்டைய கலாச்சாரமான சிந்து சமவெளி கலாச்சாரத்திற்கும் மெசபடோமிய கலாச்சாரத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது. இந்து மத புராணமான இராமாயணத்தின் நாயகன் ராமர். அவருக்கு உதவும் குரங்கு அனுமன். இந்தியாவில் பிரபலமான இந்த புராதான கதையின் நாயகரின் சிலை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஈராக்கில் உள்ள குகை ஒன்றில் பொறிக்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஆராய இந்தியாவிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் ஈராக்கிற்கு செல்ல இருக்கிறார்கள். சிந்து சமவெளியிலிருந்து பிரிந்து சென்று மெசபடோமியாவில் குடியேறியவர்கள்தான் இந்த உருவங்களை அங்கே பொறித்திருக்க வேண்டும். சிந்து சமவெளி காலத்திலேயே இங்கே இராமாயணம் இருந்ததற்கான சான்றுகள் இவை என சில மத ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் சரித்திர ஆய்வாளர்களோ அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. சிந்து நாகரிகத்திற்கு முன்பே முதலில் தோன்றிய நாகரிகமாக மெசபடோமியா கருதப்படுகிறது. எனவே மெசபடோமியாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களே சிந்து சமவெளியில் குடியேறியிருக்க வேண்டும். ஹமுராபி காலத்தில் எழுதப்பட்ட புராணம் திரிந்து இராமாயணமாக மாறியிருக்க வாய்ப்புகள் உண்டு என கூறுகிறார்கள்.
எது எப்படியிருந்தாலும் உலகில் தோன்றிய பண்டைய நாகரிகங்கள் அனைத்தும் தங்களுக்குள் ஒரு தகவல் தொடர்பை கொண்டிருந்தன என்பது மட்டும் இதன் மூலம் தெளிவாகிறது.