அமெரிக்காவின் 47வது அதிபராக இன்று பதவியேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப், நாளை சூரியன் மறைவதற்குள் எல்லையில் ஊடுருவல் என்பது முற்றிலும் நிறுத்தப்படும் என்று சவால் விடுத்துள்ளார்.
அமெரிக்க நேரப்படி இன்று திங்கட்கிழமை 11:30 மணிக்கு அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க இருக்கும் நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் வருகை தந்துள்ளார்கள்.
இந்தியாவிலிருந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய மனைவி நீதா அம்பானி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதிபர் பதவி ஏற்க இருக்கும் டிரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியபோது, நாளை சூரியன் மறைவதற்குள் எல்லையில் ஊடுருவல் என்பது முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். வெனிசுலா நாட்டில் இருந்து அதிகமான நபர்கள் அமெரிக்காவுக்குள் நுழைந்த வண்ணம் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்று கூறினார்.
மேலும் அமெரிக்க வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த நாள் நாளை முதல் தொடங்க இருப்பதாகவும் முதல் 100 நாட்களுக்கு மக்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்க உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார் .