சமீப காலமாக நிலநடுக்க சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் நேற்று இந்தோனேஷியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கண்ட தகடுகள் நகரும் பகுதியில் அதிகமான எரிமலைகளை கொண்டுள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இந்தோனேஷியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் உள்ள ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் 22 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு ஓட்டல் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகியுள்ளனர். காயம்பட்ட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த நிலநடுக்கும் இந்தோனேஷிய மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.