இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மன் ராணுவத்தை எதிர்கொண்டு இத்தாலி மண்ணில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் யஷ்வந்த் காட்கேவிற்கு சமீபத்தில் இத்தாலியில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
1921ம் ஆண்டில் பாம்பேவில் பிறந்த யஷ்வந்த் காட்கே இந்திய ராணுவத்தில் ⅗ மராத்தா லைட் இன்ஃபாண்ட்ரியில் சேர்ந்து தீரமுடன் பணியாற்றினார். 1944 ஜூலை 10ம் தேதியன்று இரண்டாம் உலகப்போரில் இத்தாலி - ஜெர்மன் இடையே நடந்த யுத்தத்தின்போது நேச நாடுகள் படைகள் சார்பில் மராத்தா படை இத்தாலி எல்லையில் போராடியது.
அப்போது ஜெர்மனியின் மெஷின் கன் போஸ்ட்டை அடைந்தபோது குண்டு வீசி அதன் நிலைகளை தாக்கிய யஷ்வந்த், ஜெர்மன் வீரர்கள் இருவரையும் கொன்றார், ஆனால் அதே போரில் குண்டடி பல பட்டதால் வீர மரணம் அடைந்தார். அவர் உடல் கடைசி வரை கிடைக்காத நிலையில், அவரது வீரத்தை போற்றும் வகையில் இங்கிலாந்து அரசு விக்டோரியா கிராஸ் விருது வழங்கி கௌரவித்தது. இத்தாலி அரசு அவருக்காக நினைவிடம் ஒன்றை மொண்டோனில் அமைத்தனர்.
சமீபத்தில் இந்திய - இத்தாலி உறவை மேம்படுத்தும் விதமாக யஷ்வந்த் காட்கேவின் சிலை ஒன்றை இந்திய அரசு இத்தாலிக்கு அன்பளிப்பாக வழங்கியது. இந்த நினைவுச்சிலையை யஷ்வந்த் காட்கேவின் நினைவிடத்தில் அமைத்து மரியாதை செலுத்தியுள்ளது இத்தாலிய அரசு.
Edit by Prasanth.K