கூகுள் நிறுவனம் தனது தயாரிப்பான Pixel 6ஏ போன் வாங்கியவர்களுக்கு ரூ.8,500 இழப்பீடாக தருவதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த இழப்பீடு இந்திய பயனர்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் Pixel 6ஏ மொபைல் போன் வாங்கியவர்கள் பேட்டரி விரைவாக தீர்ந்து போவதாகவும், அதிக வெப்பம் அடைவதாகவும் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து ஆய்வு செய்த கூகுள் நிறுவனம், Pixel 6ஏ ஃபோன் வாங்கியவர்களுக்கு இழப்பீடாக ரூ.8,500 அல்லது இலவசமாக பேட்டரியை மாற்றி தருவது ஆகிய சலுகைகளை வழங்குகிறது. பேட்டரி திறனை மேம்படுத்தவும், அதிக வெப்பமடைதல் அபாயத்தை குறைக்கவும், Pixel 6ஏ சாதனங்களுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்டேட் செய்யப்படும் என்றும் கூகுள் அறிவித்துள்ளது. இந்த அப்டேட் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும்.
இந்த நிலையில், கூகுள் Pixel 6ஏ போன் வாங்கியவர்களின் சாதனங்கள் சரிபார்க்கப்பட்டு, பேட்டரி மாற்றம் அல்லது அதற்குரிய இழப்பீடு ரூ.8,500 தருவதாக கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் Pixel 6ஏ பயனர்கள் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் தங்கள் இலவச பேட்டரிகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது ரொக்க பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த சலுகை அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள பயனர்களுக்கு கிடைக்கும். விரைவில் கூடுதலாக சில நாடுகளுக்கும் இந்த இழப்பீடை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த இழப்பீடு பெறுவதற்கு மொபைல் போன் டேமேஜ் அடையாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.