பாகிஸ்தானுடன் கச்சா எண்ணெய் உற்பத்திக்கு அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இந்தியாவை சீண்டும் வகையில் ட்ரம்ப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை தனது நட்பு நாடாக அமெரிக்கா காட்டிக் கொண்டாலும் தொடர்ந்து பல விஷயங்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவை சீண்டும் விதமாக செயல்பட்டு வருகிறார். இந்தியா மீது பரஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்திய ட்ரம்ப், புதிய வர்த்தக ஒப்பத்தங்களை மேற்கொண்டால் வரியை குறைக்கலாம் என பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவரது கோரிக்கைகள் முழுவதையும் இந்தியா ஏற்றுக் கொள்ளாவிட்டால் 25 சதவீதம் வரி விதிப்போம் என எச்சரிக்கும் வகையில் பேசினார்.
ஆனால் அதேசமயம் பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு மிகவும் நெருக்கமாகி வருகிறது. பாகிஸ்தான் ராணுவ தளபதி முனிர் சமீபத்தில் அமெரிக்கா சென்றபோது அவரை வரவேற்று ட்ரம்ப் உரையாடியிருந்தார். இந்நிலையில் தற்போது பாகிஸ்தானில் கச்சா எண்ணெய் எடுக்க அமெரிக்கா புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து ட்ரூத் தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப் “இன்று வெள்ளை மாளிகையில் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பணிகளில் நாங்கள் மிகவும் மும்முரமாக இருக்கிறோம். அமெரிக்காவை "மிகவும் மகிழ்ச்சியடையச்" விரும்பும் பல நாடுகளின் தலைவர்களிடம் நான் பேசியுள்ளேன். இன்று மதியம் தென் கொரிய வர்த்தகக் குழுவைச் சந்திப்பேன். தென் கொரியா தற்போது 25% வரியில் உள்ளது, ஆனால் அந்த வரிகளை குறைக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. அந்த சலுகை என்ன என்பதை அறிய நான் ஆர்வமாக உள்ளேன்.
பாகிஸ்தான் நாட்டுடன் நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை முடித்துள்ளோம், இதன் மூலம் பாகிஸ்தானும் அமெரிக்காவும் தங்கள் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களை மேம்படுத்துவதில் இணைந்து செயல்படும். இந்த கூட்டாண்மையை வழிநடத்தும் எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். யாருக்குத் தெரியும், ஒருவேளை அவர்கள் ஒரு நாள் இந்தியாவிற்கு எண்ணெய் விற்பனை செய்வார்கள்!
அதேபோல், மற்ற நாடுகளும் கட்டணக் குறைப்புக்கான சலுகைகளை வழங்குகின்றன. இவை அனைத்தும் நமது வர்த்தக பற்றாக்குறையை மிகப் பெரிய அளவில் குறைக்க உதவும். சரியான நேரத்தில் ஒரு முழு அறிக்கை வெளியிடப்படும். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி. அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.
சமீபமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவை சீண்டும் விதமாக பேசுவதும் செயல்படுவதுமாக உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K