பெற்றோர்களில் ஒருவர் அமெரிக்க குடிமகனாக இருந்தால் மட்டுமே அவர்களின் குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்படும் என்ற மசோதாவில் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டிரம்ப் முதல் கையெழுத்து இட போகிறார் என்றும், இதனால் கிரீன் கார்டு பெற காத்திருக்கும் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அவர் இன்னும் ஓரிரு நாட்களில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும், அமெரிக்காவை சுற்றி சுவர் எழுப்ப வேண்டும் என்றும், அதிரடியாக தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ட்ரம்ப், முதல் கட்டமாக குடியுரிமை விஷயத்தில் கை வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, குழந்தைகள் தானியங்கி குடியுரிமை பெற குறைந்தபட்சம் பெற்றோர்களில் ஒருவர் அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என்பது ட்ரம்பின் நிலைப்பாடாக உள்ளது. அதிபர் பொறுப்பேற்றவுடன் இதற்கான உத்தரவுகளில் முதலில் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது.
இதனால் கிரீன் கார்டு பெற விரும்பும் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும், மேலும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையும் அவர் எடுப்பார் என்றும், அதனால் குஜராத் உள்பட இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.