கூகுளிள் பணிபுரியும் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு வேலை நேரத்தில் அரசியல் பேசாதீர்கள் என அந்நிறுவனம் மெமோ அனுப்பியுள்ளது.
சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் கூகுள் நிறுவனம் இப்போது மீண்டும் தங்களது ஒரு மெமோவுக்காக விவாதப் பொருளாகியுள்ளது. கடந்த 23 ஆம் தேதி தங்களில் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு மெமோ ஒன்றை அனுப்பியுள்ளது நிர்வாகம். அதில் ‘தகவல்கள் மற்றும் யோசனைகளை சக பணியாளர்களுடன் பகிர்ந்துகொள்வது ஒற்றுமையை வளர்க்கும். ஆனால் அரசியல் பேசுவது அந்த நாளை பயனற்றதாக்கும். நாம் எதற்காக இந்த நிறுவனத்தில் எதற்காக நியமிக்கப்பட்டு இருக்கிறோமோ அதை செய்யாமல் விவாதம் செய்யவேண்டாம். யாரையும் கேலி செய்யாதிர்கள், யாரைப் பற்றியும் பேசி தனிமனித தாக்குதல்களில் ஈடுபடாதீர்கள். எனவே உங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை அலுவலகத்தில் இருக்கும் எல்லா நேரமும் பின்பற்றுங்கள்’ என அறிவித்துள்ளது.
சமீபத்தில் கூகுளின் முன்னாள் ஊழியர் ஒருவர் கூகுள் நிறுவனம் அமெரிக்க தேர்தலின் போது டிரம்ப்புக்கு எதிராக செயல்பட்டதாக கூறி சர்ச்சைகளைக் கிளப்பினார். அதை தனது டிவிட்டரில் பகிர்ந்திருந்தார் ட்ரம்ப். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காகவே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.