Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அருண் ஜெட்லி: 'வாஜ்பேயி, அத்வானியுடன் சிறையில் தொடங்கிய அரசியல் பயணம்'

webdunia
சனி, 24 ஆகஸ்ட் 2019 (17:27 IST)
1975 ஜூன் 25 டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் அப்போதைய தலைவரான அருண் ஜெட்லி டெல்லி, நாராயணா பகுதியில் தன் இல்லத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்.

வெளியில் சப்தம் கேட்டு அவர் எழுந்தார். வெளியே காவல் துறையினர் சிலருடன் அவருடைய அப்பா வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அவரைக் கைது செய்வதற்காக காவல் துறையினர் வந்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும், வீட்டின் பின்வாசல் வழியாக அருண் ஜெட்லி தப்பிச் சென்றுவிட்டார். அதே பகுதியில் நண்பரின் வீட்டில் அன்றைய இரவை அவர் கழித்தார்.

மறுநாள் காலை சுமார் 10.30 மணிக்கு, டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்களை, பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலகத்துக்கு எதிரே திரட்டினார்.

அங்கு அருண் ஜெட்லி உரையாற்றிய பிறகு இந்திரா காந்தியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் டி.ஐ.ஜி. பி.எஸ். பிந்தர் தலைமையிலான காவல் துறையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து, அருண் ஜெட்லியை கைது செய்தனர்.

திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டார் ஜெட்லி. அடல் பிகாரி வாஜ்பேயி, லால் கிருஷ்ண அத்வானி, கே.ஆர். மல்கானி ஆகியோர் இருந்த அறையில் 11 பேருடன் அவர் அடைக்கப்பட்டார். அது அவருக்குப் பெருமளவில் நன்மை செய்வதாக அமைந்தது.

"அருண் ஜெட்லி அரசியலுக்கு வருவது டெல்லி பல்கலைக்கழகத்தில் நிகழவில்லை. திஹார் சிறையில்தான் அது நிகழ்ந்தது. விடுதலை செய்யப்பட்டதும், அரசியல்தான் தனது எதிர்காலம் என்று அவர் அறிந்திருந்தார்,'' என்று அருண் ஜெட்லியின் நெருங்கிய நண்பர் அனிப் சச்தே கூறினார்.

நீண்ட தலைமுடியும் ஜான் லென்னானை போன்ற கண்ணாடியும்

டெல்லி புனித சேவியர் பள்ளியில் அருண் ஜெட்லி படித்தார். பிறகு புகழ்பெற்ற ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் படித்தார். அந்தக் காலத்து தி பீட்டில்ஸ் இசைக் குழுவின் ஜான் லென்னானை போல நீண்ட தலைமுடியும், கண்ணாடியும் அணிந்திருப்பார் அருண் ஜெட்லி. வட்டமான பிரேம் போட்ட கண்ணாடி அணிந்திருப்பார். சிலர் அதை `காந்தி கண்ணாடி' என்று குறிப்பிடுவார்கள்.

`தி மேரிகோல்டு ஸ்டோரி' என்ற புத்தகத்தை எழுதிய கும்கும் சாத்தா, அருண் ஜெட்லியின் கல்லூரிக்கால நண்பர் பினாவை மேற்கோள் காட்டி, ``அருண் மிக நன்றாகத் தோற்றமளிப்பார். அவரை மாணவிகள் கவனிப்பார்கள்.
ஆனால் வெட்கம் காரணமாக அவர்களை ஜெட்லி ஊக்குவித்தது கிடையாது.

மேடையில் நின்று மணிக்கணக்கில் அவரால் பேச முடியும். ஆனால் மேடையில் இருந்து இறங்கிவிட்டால் கூட்டுக்குள் அடைபட்டது போல மவுனமாகிவிடுவார். அந்தக் காலத்தில் எந்தப் பெண்ணுடனும் அவர் வெளியில் சென்றதாக எனக்கு நினைவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.
webdunia

"அருண் ஜெட்லி திரைப்படங்களை விரும்புபவர். பேடோசன் என்ற திரைப்படம் அவருக்கு மிகவும் பிடிக்கும். பல முறை அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார். படத்தின் உரையாடல்களை பல முறை அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஜானி மேரா நாம் என்ற படத்தில் தேவ் ஆனந்த் அணிந்திருந்த சட்டையின் நிறம் கூட அருண் ஜெட்லிக்கு எப்போதும் நினைவில் இருக்கும்,'' என்று அருண் ஜெட்லியின் மிக நெருக்கமான நண்பரும், பிரபல வழக்கறிஞருமான ராய்யன் கரன்ஞ்வாலா கூறியுள்ளார்.
webdunia


1977 தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும் என வாஜ்பேயி விரும்பினார்
 
ஜனதா கட்சி 1977ல் உருவாக்கப்பட்டபோது, அதன் தேசிய செயற்குழுவில் அருண் ஜெட்லி சேர்க்கப்பட்டார் என்று புத்தக ஆசிரியர் கும்கும் சாத்தா நினைவுகூர்கிறார். 1977 தேர்தலில் ஒரு வேட்பாளராக இவரை நிறுத்த வேண்டும் என்று வாஜ்பேயி விரும்பினார்.

ஆனால் குறைந்தபட்ச வயது வரம்பைவிட இவர் ஒரு வயது குறைவாக இருந்ததால் போட்டியிட முடியவில்லை. சிறை சென்ற காரணத்தால் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு படிப்பையும் அவர் இழந்தார். எனவே பட்டப் படிப்பை முடிக்க அவர் முடிவு செய்தார்.

நடனம் தெரியாது என்றாலும் டிஸ்கோவுக்குச் செல்லப் பிடிக்கும்

webdunia

மாணவர் பருவத்தில் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த காலத்தில் அருண் ஜெட்லியும் அவருடைய நண்பர்களும் டெல்லியில் இருந்த ஒரே டிஸ்கோ கிளப் "செல்லாருக்கு" செல்வது உண்டு.

``டிஸ்கோ கிளப்புக்கு செல்ல அருண் ஜெட்லிக்கு பிடிக்கும். அவருக்கு அதிகம் நடனம் தெரியாது. கார் ஓட்டுவதற்கு கூட அவர் கற்றுக் கொள்ளவில்லை. ஒரு டிரைவர் வைத்துக் கொள்ளும் வரையில், அவருக்கு அவருடைய மனைவி சங்கீதாதான் கார் ஓட்டி வந்தார்'' என்று ஜெட்லியின் நண்பர் பினா கூறியதாக கும்கும் சாத்தா தெரிவித்துள்ளார்.

விலை உயர்ந்த பொருட்களை விரும்புவார்

ஜம்முவில் இருந்து மக்களவைக்கு இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டவரும், ஜம்மு காஷ்மீர் அரசில் அமைச்சராக இருந்தவருமான காங்கிரஸ் முக்கிய தலைவர் கிர்தாரி லால் டோக்ராவின் மகள் சங்கீதா டோக்ராவை அருண் ஜெட்லி திருமணம் செய்து கொண்டார்.

அடல் பிகாரி வாஜ்பேயும், இந்திரா காந்தியும் அவருடைய திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நாட்டின் உயர்நிலை வழக்கறிஞராக ஒரு காலத்தில் அருண் ஜெட்லி இருந்தார். அவருக்கான கட்டணமும் மிகவும் அதிகம். விலை அதிகமான கைக்கடிகாரங்களை வாங்குவது அவருக்குப் பிடிக்கும். அந்தக் காலத்தில் பெரும்பாலான இந்தியர்கள் ஒமேகா கைக்கடிகாரங்களைத் தாண்டி எதையும் நினைத்துப் பார்க்க முடியாத சூழ்நிலையில், அவர் பிலிப்பே படேக் கடிகாரம் ஒன்றை வாங்கினார்.

மோன்ட் பிளாங்க் பேனாக்கள், ஜாம்வர் சால்வைகளை நிறைய சேகரித்து வைத்திருந்தார். இந்தியாவில் அவரால் இவற்றை வாங்க முடியாமல் போனால், பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யாரின் மகனும் இவருடைய நண்பருமான ராஜீவ் நய்யார், வெளிநாட்டில் தனக்குள்ள தொடர்புகள் மூலம் அந்தப் பேனாக்களை வாங்கி அனுப்ப ஏற்பாடு செய்வார்.

கைகளால் தயாரிக்கப்பட்ட ஜான் லோப் ஷூக்களையும், லண்டனில் தயாரிக்கப்பட்ட பெஸ்போக் சட்டைகளையும் அந்தக் காலத்தில் அருண் ஜெட்லி அணிவார். ஜியோ எஃப் டிரம்பர் சேவிங் கிரீம் மற்றும் பிரஸ்களை தான் அவர் பயன்படுத்தி வந்தார்.
 

நல்ல உணவுகளை அனுபவித்து சாப்பிடுவார்

நல்ல உணவை சாப்பிடுவதை அருண் ஜெட்லி எப்போதும் விரும்புவார், ரசிப்பார். டெல்லியின் மிகப் பழமையான ரோஷன் ஆரா கிளப் உணவை அவர் விரும்புவார். டெல்லி கன்னாட் பிளேசில் உள்ள புகழ்பெற்ற குவாலிட்டி ரெஸ்டாரன்ட்டில் இருந்து வரும் `சானே பாட்டுரே' -வின் பெரிய ரசிகராக இருந்தார்.

சுவைமிக்க ஜிலேபிகள், கச்சோரி மற்றும் பழைய டெல்லியின் ராப்ரி பலூடா ஆகியவற்றுடன் வளர்ந்தவர் அருண் ஜெட்லி. ஆனால் நீரிழிவு நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்ட பிறகு, அவர் மகிழ்ந்து சாப்பிட்ட நிறைய உணவுகளைக் கைவிட வேண்டியதாயிற்று. ஒரு ரொட்டி மற்றும் சில சைவ உணவு என்பதாக அவருடைய மதிய உணவு குறைந்து போய்விட்டது.

2014ல் அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியிருந்தபோது, இருக்கையில் அமர்ந்து கொண்டு உரையை வாசிக்க மக்களவைத் தலைவரிடம் அனுமதி பெற்று, நிறைவு செய்தார். நாடாளுமன்ற விதிகளின்படி, நிதியமைச்சர் உரையாற்றும் போது நின்று கொண்டு பேச வேண்டும். ஆனால் அவர் உரையாற்றும் போது அமர்ந்து கொள்வதற்கு, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சிறப்பு அனுமதி அளித்தார்.

அருண் ஜெட்லி சுளுக்கு பிடிப்பின் வலி காரணமாக அடிக்கடி பின்பக்கத்தை தொட்டுக் கொண்டிருந்ததால், அவருக்கு ஏதோ உடல்நலக் குறைவு இருக்கிறது என்று, பார்வையாளர் மாடத்தில் இருந்த அவருடைய மனைவிக்குத் தெரிந்துவிட்டது.

போபர்ஸ் புலனாய்வில் முக்கிய பங்கு
 
வி.பி. சிங் தலைமையிலான அரசு 1989ல் ஆட்சிக்கு வந்தது. அப்போது 39 வயது மட்டுமே ஆகியிருந்த அருண் ஜெட்லி, இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

ஜனவரி 1990ல் இருந்து, போபர்ஸ் புலனாய்வு தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரி பூரே லால் மற்றும் சிபிஐயின் டி.ஐ.ஜி.யான எம்.கே. மாதவன் ஆகியோருடன் அருண் ஜெட்லி சுவிட்சர்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

ஆனால் எட்டு மாத காலம் நீண்ட புலனாய்வு செய்த பிறகும், அவர்களால் வலுவான ஆதாரம் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அருண் ஜெட்லியும் அவருடைய அணியினரும், போபர்ஸ் புலனாய்வை இதே பாணியில் வெளிநாடுகளில் தொடர்ந்தால், சீக்கிரமே அவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களாகிவிடுவார்கள் என்று அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேலியாகக் குறிப்பிட்டார்.

ஜெயின் நிதி மோசடி (ஹவாலா) வழக்கில் அத்வானிக்கு ஆதரவாக வாதாடினார்

1991ஆம் ஆண்டில் டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் திரைப்பட நட்சத்திரம் ராஜேஷ் கன்னாவை எதிர்த்து லால் கிருஷ்ண அத்வானி போட்டியிட்டபோது அவருடைய தேர்தல் ஏஜென்ட்டாக அருண் ஜெட்லி பணியாற்றினார். தீவிர முயற்சிகள் காரணமாக, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அத்வானி வெற்றி பெறுவதை ஜெட்லி உறுதி செய்தார்.

`மேல் தட்டு மனப்பான்மை' கொண்டவர் என்ற அடையாளம் இருப்பதால் பாஜகவின் தலைவராக அருண் ஜெட்லி ஒருபோதும் வர முடியாது என்று, பாஜகவின் பொதுச் செயலாளர்களில் ஒருவர் உள்பட பல தலைவர்கள் கூறுவார்கள். அந்த அடையாளம் காரணமாக அரசியலில் பலவற்றை அவர் இழந்தார். நவீன மற்றும் விலகி இருக்கும் அரசியல் போக்கு, கட்சியில் அடிப்படைவாத சிந்தனை உள்ள அல்லது பழைய சிந்தனையுள்ளவர்களுக்கும், தீவிர கருத்தாளர்களுக்கும் இவரைப் பிடிக்காமல் போனது. கட்சியில் எப்போதுமே அவர் சந்தேகக் கண்ணுடனே பார்க்கப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் `உள் வட்டத்தில்' ஒருபோதும் அவர் இருந்தது கிடையாது. இந்துத்வா என்பது சந்தர்ப்பவாத பிரச்சனை என்று அருண் ஜெட்லி கூறியதாக விக்கிலீக்ஸ் மூலம் பெறப்பட்ட ஒரு கேபிளை தி இந்து நாளிதழ் 2011ல் வெளியிட்டது. இருந்தபோதிலும், அதை மறுத்து பிறகு அருண் ஜெட்லி அறிக்கை வெளியிட்டார்.

ஆனால் அதற்கு இன்னொரு பக்கம் இங்கே இருக்கிறது. பாஜகவுக்கு அடையாளம் காரணமாக மக்களிடம் நெருங்க முடியாமல் திணறியதாக ஜெட்லியின் பழைய நண்பர்களில் ஒருவரான ஸ்வபன் தாஸ்குப்தா கூறியுள்ளார். நாட்டில் தலையெடுக்கும் நடுத்தர மக்கள் மத்தியில் பாஜகவை ஏற்கச் செய்யும் வாய்ப்பை உருவாக்க ஜெட்லி உதவினார் என்று அவர் குறிப்பிடுகிறார்.

`தவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர்' என்று ஜெட்லி பற்றி அடிக்கடி பலரும் கூறுவார்கள். ஆனால் இந்தக் கருத்தை ஜெட்லி ஒருபோதும் விரும்பியது கிடையாது.

மக்கள் அடித்தளம் இல்லாததால் இழப்புகள்

எப்போதும் மாநிலங்களவைத் தேர்தல் மூலமாக நாடாளுமன்றத்தில் நுழைந்தவர் அருண் ஜெட்லி. நல்ல சொற்பொழிவாளராக இருந்தாலும், மக்கள் ஆதரவு என்ற அடித்தளம் இல்லாததால் அவருக்கு உரிய உயரங்களை அவரால் அடைய முடியாமல் போனது.

எதிர்கால பிரதமர் என்று பாஜகவில் உள்வட்டத்தில் உள்ள சிலரே கூறும் அளவுக்கு அவருடைய நாடாளுமன்ற செயல்பாடுகள் சிறப்பாக இருந்தன. 2005ல் முதன்முறையாக அவர் தீவிரமாக நோய்வாய்ப்பட்டார். மூன்று பை-பாஸ் அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியதாயிற்று.

கட்சித் தலைவர் பதவியில் இருந்து லால் கிருஷ்ண அத்வானி ராஜிநாமா செய்தபோது, அடுத்து தமக்கான வாய்ப்பு வரும் என்று ஜெட்லி நினைத்திருந்தார். ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடன் சம காலத்தவரான வெங்கய்ய நாயுடு அந்தப் பதவிக்கு தேர்வு செய்யப் பட்டிருந்தார்.
ஆனால் அவருக்குப் பதிலாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தாக்குர் இனத்தவரான ராஜ்நாத் சிங்கை தலைவர் பதவிக்கு பாஜக தேர்வு செய்ததால் அவர் ஏமாற்றம் அடைந்தார்.
 

அரசு விருந்தினர் விடுதிக்கு சொந்தப் பணத்தில் கட்டணம் செலுத்தியவர்

வாஜ்பேயி அரசில் அருண் ஜெட்லி அமைச்சராக இருந்தபோது தன் நண்பர்களுடன் ஒரு முறை நைனிடால் சென்றிருந்தார். அங்கு அவருக்கு ஆளுநர் மாளிகையில் விருந்தினர் விடுதியில் இடம் அளிக்கப்பட்டது.

அவருடைய நம்பர் சுகைல் சேத் ``என் நண்பர் அருண் ஜெட்லி'' என்ற தலைப்பில் ஓப்பன் என்ற சஞ்சிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

அந்த விடுதியை காலி செய்வதற்கு முன்னதாக, அனைத்து அறைகளுக்குமான கட்டணத்தை தன் சொந்தப் பணத்தில் இருந்து ஜெட்லி செலுத்தினார் என்று அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார். தன் செலவுகளுக்குரிய கட்டணத்தை ஓர் அமைச்சர் செலுத்தியதை முன் எப்போதும் தாங்கள் பார்த்தது கிடையாது என்று ஆளுநர் மாளிகை விருந்தினர் விடுதி அலுவலர்கள் கூறினர் என்றும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அருண் ஜெட்லி எப்போது லண்டன் சென்றாலும், அங்குள்ள முன்னணி தொழிலதிபர்கள் பலர் அவரை வரவேற்க கார்கள் அனுப்புவார்கள் என்றாலும், ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து நகருக்கு, மெட்ரோ ரயிலில் தான் அருண் ஜெட்லி செல்வார் என்றும் தன் கட்டுரையில் சுகைல் சேத் கூறியுள்ளார். மக்கள் தன்னை கவனிக்கிறார்கள் என்று நம்பும் போது பலர் இதுபோல செய்வார்கள். ஆனால் யாருமே பார்க்காத போதும் அருண் ஜெட்லி இப்படி செய்திருக்கிறார்.
webdunia

பாசக்கார நண்பர்

அருண் ஜெட்லி வீட்டில் ஓர் அறை `ஜெட்லியின் கூடம்' என்று அழைக்கப்படும். வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த தன்னுடைய மிக நெருக்கமான நண்பர்களை அந்த அறையில்தான் அவர் சந்திப்பார். சுகைல் சேத், வழக்கறிஞர்கள் ராய்யன் கரன்ஞ்வாலா, ராஜீவ் நய்யார், இந்துஸ்தான் டைம்ஸ் உரிமையாளர் ஷோபனா பாரட்டியா, காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோரை அந்த அறையில் அடிக்கடி பார்க்க முடியும்.

வாஜ்பேயி காலத்தில் அருண் ஜெட்லி எப்போதும் அத்வானியின் விசுவாசியாகவே கருதப்பட்டார். ஆனால் 2013ல் அவர் அத்வானி முகாமில் இருந்து வெளியேறி மோதி முகாமில் சேர்ந்தார்.
 
webdunia

2002ஆம் ஆண்டில், குஜராத் கலவரங்களுக்குப் பிறகு `அரச தர்மத்தை' பின்பற்ற வேண்டும் என்று நரேந்திர மோதிக்கு வாஜ்பேயி எச்சரிக்கை விடுத்த போது, மோதிக்கு ஜெட்லி தார்மிக ஆதரவு அளித்ததுடன், மாநில முதல்வராக மோதி நீடிப்பதற்கு முக்கிய பங்காற்றினார். குஜராத் கலவர வழக்கில், மோதிக்கு ஆதரவாக நீதிமன்றங்களில் அவர் ஆஜரானார்.

2014 தேர்தலில் அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதியில் அருண் ஜெட்லி தோல்வி அடைந்த போதிலும், அவரை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டது மட்டுமின்றி, நிதி மற்றும் பாதுகாப்பு என இரு முக்கிய இலாக்காக்களின் பொறுப்பை அவரிடம் மோதி ஒப்படைத்தார்.

ஜெட்லி நிதியமைச்சராக இருந்தபோது இந்திய ரூபாய் நோட்டில் பண மதிப்பு நீக்கம் செய்வது மற்றும் ஜிஎஸ்டி அமல் ஆகியவற்றை நரேந்திர மோதி அமல் செய்தார்.

கடந்த ஆண்டு அருண் ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல்நிலை மோசமாக இருந்ததால், 2019 தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. நரேந்திர மோதி அமைச்சரவையில் இடம் பெற மாட்டேன் என்று அவரே அறிவிப்பு வெளியிட்டார்.

இப்போது நரேந்திர மோதிக்கு நெருக்கமானவராக அமித்ஷா பார்க்கப் படுகிறார். ஆனால் ஒரு காலத்தில் பாஜக மத்திய தலைமையில் மோதிக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர் அருண் ஜெட்லி.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia Hindi

அடுத்த கட்டுரையில்

சண்டை போடாமல் ’அன்பு வைத்த’ கணவனை விவாகரத்து கோரிய மனைவி !