அமெரிக்கா மெக்ஸிகோ எல்லையில் எல்லைச்சுவர் கட்டுவது தொடர்பான கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டதால் அமெரிக்காவில் அரசியல் ஷட்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதிரடி நடவடிக்கைகள் என்றால் அதில் சில முட்டாள்தனமான நடவடிக்கைகளும் அடக்கம், வெளிநாட்டவருக்கு விசா மறுப்பது, எதிரி நாடுகளின் மீது பொருளாதார தடை விதிப்பது, அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவது போன்றவை சில உதாரணங்கள். அதனால் அமெரிக்காவிலும் மற்ற உலக நாடுகளிலும் கடுமையான விமர்சனங்களையும் கேலிகளையும் எதிர்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் மெக்சிகோவில் இருந்து அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்க அமெரிக்க மெக்சிகோ எல்லை எல்லையில் எல்லைச்சுவர் கட்டும் கோரிக்கையை முன்வைத்தார் ட்ரம்ப். இந்த திட்டத்திற்காக 500 கோடி டாலர் நிதி ஒதுக்கவேண்டுமெனெவும் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்க முடியாதென ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டனர்.
இதுபோன்ற அரசியல் காரணங்களுக்காக நிதி ஒதுக்க முடியாத நிலைமை, புதிய சட்டங்களில் அதிபர் கையெழுத்திட மறுப்பது போன்ற சூழ்நிலைகளில் அமெரிக்காவில் ஷட்டவுன் அறிவிக்கப்படும். ஆதலால் எல்லைச்சுவர் விஷயத்தில் எந்தவொரு முடிவும் எடுக்க முடியாத சூழலில் இப்போது ஷட்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய அசாதாரணமான சூழ்நிலையால் அமெரிக்க அதிபர் கிறிஸ்துமஸ் விடுமுறையையும் அனுபவிக்காமல் வெள்ளை மாளிகையிலேயே வசித்து வருகிறார். கையெழுத்திட மறுத்துள்ள ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் ட்ரம்ப். ஆனால் அவர்கள் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கொண்டாடி வருகின்றனர். இதனால் தொடர்ந்து 4 அவது நாளாக இன்று ஷட்டவுன் தொடகிறது.