மாலத்தீவில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் இந்திய விமானத்தில் மருத்துவமனை செல்ல அனுமதிக்கப்படாததால் பலியானதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பிரதமர் மோடி லட்சத்தீவுகள் சென்றதும், அதற்கு மாலத்தீவு அரசியல் தலைவர்கள் செய்த விமர்சனங்களும் இரு நாடுகளுக்கிடையே உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாலத்தீவின் அதிபர் முகமது முய்சு, மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 88 இந்திய படை வீரர்களை திரும்பப்பெறும்படி இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாலத்தீவில் ஒவ்வொரு தீவுகளுக்கும் இடையே அவசர உதவிகளுக்காக சென்று வர இந்திய அரசால் ட்ரோனியர் ரக விமானங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதை இந்திய படை வீரர்களே இயக்கி வருகின்றனர். இந்நிலையில் மாலத்தீவில் கபி அலிப் லிவிங் இல்ஸ் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு சமீபத்தில் வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரை உடனடியாக மேல்சிகிச்சைக்கு தலைநகர் மாலிக்கு விமானத்தில் அழைத்து செல்ல வேண்டிய அவசரம் இருந்துள்ளது. ஆனால் இந்திய விமானத்தில் சிறுவனை அழைத்து செல்ல அதிபரின் அனுமதி பெற வேண்டி இருந்துள்ளது. இதனால் சில மணி நேரங்கள் தாமதமாகவே சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
விமான அனுமதி அளிப்பது தொடர்பான அதிபரின் தாமதத்தால் சிறுவன் உயிர் பலியானதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.