பொங்கலையொட்டி சிறாவயலில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் 10 வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தை பொங்கல் திருநாளை ஒட்டி தமிழக கிராமப்பகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட வீர விளையாட்டுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பாலமேடு, அவனியாபுரத்தை தொடர்ந்து இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போல மஞ்சு விரட்டு போட்டிகளும் சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புகழ்பெற்ற விளையாட்டாகும்.
ஆனால் ஜல்லிக்கட்டை போல அல்லாமல் திறந்தவெளியில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியில் ஆபத்தும் உள்ளது. இன்று சிவகங்கை மாவட்டம் சிறாவயல் கிராமத்தில் மஞ்சு விரட்டு போட்டி நடந்து வரும் நிலையில் மஞ்சு விரட்டில் சீறி வந்த காளை ஒன்று 10 வயது சிறுவனை முட்டி தூக்கியதில் அந்த சிறுவன் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
அதை தொடர்ந்து பெயர் தெரியாத மற்றொரு இளைஞரும் காளை மாடு தாக்கியதில் பலியாகியுள்ளார். இதுவரை 70க்கும் மேற்பட்டோர் காயம்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.