சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவிலிருந்து பரவியதாக சீனா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனாவில் பல உயிர்களை பலி வாங்கிய நிலையில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. கிட்டத்தட்ட கொரோனா பரவ தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க இயலாத சூழல் உள்ளது.
இந்நிலையில் சமீப காலமாக கொரோனா பரவலுக்கு வேறு சில நாடுகள் மீது சீனா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. தற்போது கொரோனா இந்தியாவிலிருந்து பரவ தொடங்கியதாக புதிய குற்றச்சாட்டு ஒன்றையும் வைத்துள்ளது. “2019ம் ஆண்டில் கோடைக்காலத்தில் ஏற்பட்ட வெப்பம் காரணமாக மனிதர்கள், விலங்குகள் ஒரே தண்ணீரை குடித்ததால் இந்தியாவில் கொரோனா உருவானது” என சீன ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ நிபுணர்கள் சிலர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.