உலகளவில் நிலத்தடி நீரின் வெப்பநிலை அதிகரித்து வருவதாகவும், அதனால் எதிர்காலத்தில் நிலத்தடி நீரும் குடிக்க முடியாததாக மாறும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டிருந்தாலும், அதில் நன்னீர் என்பது மிகவும் குறைந்த சதவீதமே உள்ளது. பல நாடுகளிலும் ஆறு, ஏரிகளில் ஏற்படும் நீர் வறட்சி காரணமாக நிலத்தடி நீரை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. ஆனால் உலக வெப்பமயமாதல் காரணமாக மெல்ல நிலத்தடி நீரின் வெப்பநிலையும் அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகளாவிய நிலத்தடி நீர் வெப்பநிலை மாதிரி மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நிலத்தடி நீரின் வெப்பநிலை 2.1 முதல் 3.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறாக நிலத்தடி நீர் அதிக வெப்பம் கொண்டதாக மாறும்போது நோய்கிருமிகளும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் எதிர்காலத்தில் நிலத்தடி நீரும் மனிதர்கள் குடிக்க இயலாததாக மாறும் அபாயம் உள்ளதாகவும், மேலும் நிலத்தடி நீரை சார்ந்துள்ள விவசாயம், உற்பத்தி ஆகியவைய்ம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K