பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி ஸ்பெயினில் அவரது திருவுருவப்படத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், அங்கு அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு பதிவிட்டுள்ள அவர், தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக - அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவுநாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.