Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்களைத் தேடி உங்கள் ஊரில் புதிய திட்டம் அறிமுகம்...

Advertiesment
உங்களைத் தேடி உங்கள் ஊரில் புதிய திட்டம் அறிமுகம்...

Sinoj

, செவ்வாய், 30 ஜனவரி 2024 (20:30 IST)
அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது - பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
 
'' தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான
திராவிட மாடல் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்கள் நலனை முன்னிறுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி, அவற்றைத் திறம்படச் செயல்படுத்தி, முத்திரை பதிக்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், இல்லம் தேடி கல்வி திட்டம் மக்களைத் தேடி மருத்துவம்:நான் முதல்வன் இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48; புதுமைப் பெண் முதலமைச்சரின் காலை உணவு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கள ஆய்வில் முதலமைச்சர் மற்றும் மக்களுடன் முதல்வர் போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்கள் மக்களுக்காகத் தீட்டப்பட்டு, அவை அனைத்தும் கடைக்கோடியில் வாழக்கூடிய மனிதரையும் சென்றடையத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இந்தியாவிலேயே தமிழ்நாட்டினை முன்னணி மாநிலமாக தலைநிமிரச் செய்திருக்கிறார் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்.
 
அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களைச் சென்றடையும் வகையிலும்,
நிருவாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடும் வகையிலும், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 23-11-2023 அன்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, இத்திட்டம் நாளை (31.01.2024) புதன்கிழமை நடைமுறைக்கு வருகிறது.
 
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம், சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற
அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட வட்டத்தில், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். மேலும், முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
 
இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர்அலுவலர்கள், காலை 9.00 மணி முதல், மறுநாள் காலை 9.00 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர். கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள், மேம்பட்ட சேவைகள் வழங்குதல் / திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும் அன்றையதினம், மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று அவற்றின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
 
அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக, இந்த முகாமினை
பொது மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், துறை அலுவலர்கள் பொது மக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து, எவ்வித தாமதமும் இன்றி அவற்றை நிறைவேற்றிட வழிவகை காண வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சவுக்கு சங்கர் மீது போலீஸார் வழக்குப் பதிவு