இந்தியா, தனக்கு போட்டியாக உருவாகும் என்ற பயத்தால், அதனை வழிக்கு கொண்டு வர அமெரிக்கா, அதானி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக ரஷ்ய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சில முக்கிய முடிவுகளை சமீப காலமாக இந்தியா ஏற்க மறுத்து வருகிறது. இதனால், இந்தியாவை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க அரசு அதிகாரிகளின் திட்டமிட்ட சதியே அதானி மீதான குற்றச்சாட்டு என அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான அதானியின் மீது நடவடிக்கை எடுத்து, இந்திய அரசை வழிக்கு கொண்டு வரும் நோக்குடன் திட்டமிடப்பட்டதென குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சமீபத்தில் ட்ரம்ப் வெற்றி பெற்ற போது அதானி தனது "எக்ஸ்" பக்கத்தில் வாழ்த்துக்களை வெளிப்படையாக தெரிவித்தார். இது, அமெரிக்காவின் ஆளும் கட்சிக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாகவும், பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானியின் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம், இந்திய பங்குச்சந்தையை பாதிக்கச் செய்யலாம் என்ற எண்ணத்துடன் அமெரிக்கா செயல்படுவதாகவும், இதிலிருந்து அதானி மற்றும் இந்தியா மீண்டு வரும் என்றும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.