இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்து கனடாவுக்கு படிக்க சென்ற 50 ஆயிரம் மாணவர்கள் காணாமல் போனதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் கல்வி பயில 50,000 மாணவர்கள் விசா பெற்ற நிலையில், எந்தக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் அவர்கள் சேரவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில், 5.4% இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கிறது.
பல்வேறு நாடுகளில் இருந்து கல்வி பயில்வதற்காக கனடா விசா பெற்று கனடாவுக்கு வந்த மாணவர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களில் சீனா, ஈரான், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்திய மாணவர்கள் என மொத்தம் 50 ஆயிரம் பேர் எந்தக் கல்வி நிலையத்திலும் சேரவில்லை என்றும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக, இவ்வாறு கல்லூரியில் சேராத மாணவர்கள் சட்டவிரோதமாக கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றிருக்கலாம் என்று கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவில் இருந்து அமெரிக்கா செல்வது மிகவும் எளிமையானதாக இருக்கிறது என்றும், அதனால் கனடா விசா பெற்று அங்கிருந்து ஏஜென்சிகள் மூலம் அமெரிக்காவுக்கு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கல்வி விசாவில் வந்தவர்களின் விவரங்கள் கணக்கு எடுக்கப்படுவதாகவும், அவர்களை தேடும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் கனடா அரசு கூறியுள்ளது. இந்த தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.