பிரேசில் நாட்டில் சிறைக்குள் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 25 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரேசில் நாட்டின் அந்நாட்டின் ரோராய்மா மாகாணத்தில் போவ் விஸ்ட்டா நகரில் கொடும் குற்றவாளிகளை அடைத்து வைக்கும் அக்ரிகோலா டி மான்ட்டே கிறிஸ்ட்டோ மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது.
இச்சிறை, தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இருந்து சுமார் 3,400 கிலோமீட்டர் தூரத்தில் வெனிசுலா நாட்டின் எல்லையோரம் உள்ளது.
இந்தச் சிறையில் நேற்று திடீரென கலவரம் ஏற்பட்டது. சிறைக் கைதிகளுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், கைதிகளைப் பார்க்க வந்திருந்தவர்களும் சிக்கிக் கொண்டனர். கைதிகள், தங்களுக்குள் பயங்கரமான மோதலில் ஈடுபட்டனர்.
இருதரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த சிறப்பு பாதுகாப்பு படையினர், கைதிகள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த மோதலில் 25 கைதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்களில் ஏழு கைதிகள் தலை துண்டித்தும், ஆறு கைதிகள் உயிருடன் எரித்தும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த மோதலில் பார்வையாளர்கள் உள்பட 50க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.