தென்கொரியாவில் மீன்பிடி படகு எரிபொருள் நிரப்பும் கப்பல் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்து 13 பேர் பலியாகியுள்ளனர்.
தென்கொரியாவில் மேற்கு கடலோர பகுதியில் உள்ள இன்சியான் என்ற இடத்தில் 2 மாலுமிகள் உள்பட 22 பேர் படகில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த எரிபொருள் நிரப்பும் கப்பல் மீது மீன்பிடி படகு எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் மீன்பிடி படகு நிலை தடுமாறி நீரில் மூழ்கியது.
இது குறித்து உடனடியாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 7 பேரை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும் 13 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.
மாயமாகிய இரண்டு பேரை கண்டுபிடிப்பதற்காக கடற்படைக்கு சொந்தமான 5 ஹெலிகாப்டர்கள் மற்றும் 19 கப்பல்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.