Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக சினிமா - போன் டமஹாக்

உலக சினிமா - போன் டமஹாக்
, திங்கள், 31 அக்டோபர் 2016 (10:06 IST)
வெஸ்டர்ன் படங்களுக்கு (கௌபாய் படங்களுக்கு) எப்போதும் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் தொடர்ச்சியாக வெஸ்டர்ன் படங்கள் எடுக்கப்படுகின்றன. சென்ற வருடம் ஹர்ட் ரஸல் நடிப்பில் வெளிவந்த வெஸ்டர்ன் திரைப்படம், போன் டமஹாக் (Bone Tomahawk).

 
சமீபகாலங்களில் வெளிவந்த வெஸ்டர்ன் திரைப்படங்களில் இது மேம்பட்டது எனலாம்.
 
இந்தப் படத்தின் கதை நடப்பது 1890-இல். பாலைவனப்பகுதியில் தூங்கிக் கொண்டிருக்கும் பயணியின் கழுத்தை பெர்விஸ் என்பவன் அறுப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. அவனது கூட்டாளி ஒரு கிழவர். இருவரும், பயணிகளைக் கொன்று அவர்களின் உடமைகளை கொள்ளையடிக்கும் கொலைகாரர்கள் கம் திருடர்கள்.
 
அவர்கள் இறந்து போனவர்களின் பைகளை சோதனை செய்யும் போது குதிரைகளின் குளம்படி சத்தம் கேட்கிறது. இருவரும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுகிறார்கள். சத்தம் அவர்களை பின் தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவின் ஆதிகுடிகளான செவ்விந்தியர்களின் சிமித்ரிக்கு அவர்கள் வருகிறார்கள். இந்த நேரம், அம்பு ஒன்று கிழவரை தாக்குகிறது. கிழவர் இறந்து போக, பெர்விஸ் தப்பிக்கிறான்.
 
11 தினங்களுக்குப் பிறகு பெர்விஸ் ஒரு சின்ன நகத்தை அடைகிறான். அவர் பொருள்களை புதைத்து வைப்பதை அந்நகர ஷெரீப்பின் உதவியாளர் பார்த்துவிடுகிறார். ஷெரீப் ப்ராங்கிளின் ஹன்டுக்கு தகவல் போகிறது. அவர் தப்பிக்கப் பார்க்கும் பெர்விஸை சுட்டுப் பிடிக்கிறார். 
 
அன்றிரவு பெர்விஸுக்கு சிகிச்சை அளிக்க வரும் சமந்தா என்கிற மருத்துவரின் உதவியாளரும், பெர்விஸும், ஷெரீப்பின் இன்னொரு உதவியாளனும் மாயமாக மறைந்து போகிறார்கள். அவர்களை கடத்தி, குதிரைகளை கொள்ளையடித்தது யாராக இருக்கும் என்று விசாரணை நடக்கிறது. 
 
அவர்கள் செவ்விந்தியர்கள் கிடையாது என்ற தகவல் தெரியவருகிறது. மேலும், அவர்களுக்கு மொழி கிடையாது. அதிர்ச்சியான விஷயம், அவர்கள் மனிதர்களை கொன்று சாப்பிடக் கூடியவர்கள். 
 
நரமாமிசம் சாப்பிடுகிறவர்களை ஷெரீப் மற்றும் அவர்களது ஆள்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? சமந்தாவை காப்பாற்ற முடிந்ததா? என்பது படத்தின் விறுவிறுப்பான பகுதி.
 
மனிதர்களை இரண்டாக பிளந்து அவர்களின் தசைகளை சாப்பிடும் காட்சிகள் படத்தில் வருகிறது. கொலை செய்யும் காட்சிகளும் படத்தில் தாராளம். அதனால், இந்தப் படம் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. ஷெரீப்பாக நடித்திருக்கும் ஹர்ட் ரஸலின் நடிப்பு படத்துக்கு பெரிய பலம்.
 
வெஸ்டர்ன் படங்களின் ரசிகர்கள் இந்தப் படத்தை முயன்று பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணிச்சல்தான் என் வெற்றியின் ரகசியம் - தமன்னா பேட்டி