பாகுபலி படத்துக்குப் பிறகு தமன்னாவிடம் நிறைய மாற்றங்கள். துணிச்சலான வேடங்கள் தமன்னாவை தேடி வருகின்றன. அவரும் சவாலான வேடங்களாக தேடிப் போகிறார். சினிமா குறித்தும் நிறைய பேசுகிறார் தமன்னா...
உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?
சினிமாவில் அறிமுகமான போது தென்னிந்திய மொழி படங்களில் நடித்தேன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் எனக்கு தெரியாது. கலாசாரமும் வித்தியாசமாக இருந்தது. அப்போது நான் பயந்து இருந்தால் சினிமாவில் நடித்து இருக்கவே முடியாது. எதையும் சந்திக்கலாம் என்ற தைரியத்தில் நடிக்க வந்தேன். அந்த துணிச்சல்தான் என்னை இந்த உயரத்துக்கு கொண்டு சென்று இருக்கிறது. அதுதான் எனது வெற்றியின் ரகசியமாகவும் இருக்கிறது.
நீங்கள் அறிமுகமான போது இருந்த சினிமாவுக்கும், இப்போதைய சினிமாவுக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா?
கதாநாயகிகளுக்கு முன்பெல்லாம் வயதை பார்த்தே பட வாய்ப்புகள் வந்தன. 30 வயது நிரம்பிய கதாநாயகிகளுக்கும் 10 வருடங்களாக நடித்துக்கொண்டு இருக்கும் நடிகைகளுக்கும் குறிப்பிட்ட கதைகள் கிடைப்பது இல்லை. அவர்களை ஒதுக்கும் நிலையே இருந்தது.
இப்போது நிலைமை மாறியிருக்கிறதா?
இப்போது அந்த நிலைமைகளில் மாற்றம் வந்து இருக்கிறது. வயதை பொருட்படுத்துவது இல்லை. மூத்த நடிகர்களைப்போல் வயதான நடிகைகளுக்கும் பட வாய்ப்புகள் வருகின்றன. திருமணமான நடிகைகளுக்கும் படங்கள் குவிகிறது. இதற்கு உதாரணம் வட இந்திய நடிகைகள். அங்கு திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகும் கதாநாயகிகளாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள்
பத்து வருடங்களை சினிமாவில் கடந்துவிட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இதை எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.
எப்படி...? விரிவாகச் சொல்ல முடியுமா?
நான் 10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இன்னும் எனது மார்க்கெட் சரியவில்லை. பட வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. ரசிகர்களும் என்னுடைய நடிப்பை விரும்பிப் பார்க்கிறார்கள்.
இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
இப்போதெல்லாம் டைரக்டர்களும் 20 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கும் பெண்களுக்கான கதைகளையே தயார் செய்கிறார்கள். அதுவும் ஒரு காரணம்.
தர்மதுரை படத்தில் நடித்ததை பற்றி சொல்லுங்கள்...?
என்னுடைய கரியரில் முக்கியமான படங்களில் தர்மதுரையும் ஒன்று. சீனு ராமசாமிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.