Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூங்கா: திரைவிமர்சனம்

Advertiesment
ஜூங்கா: திரைவிமர்சனம்
, வெள்ளி, 27 ஜூலை 2018 (13:08 IST)
விஜய்சேதுபதி நடிப்பில் 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் மீண்டும் இணைந்து இயக்கிய படம் தான் 'ஜூங்கா'. முழுக்க முழுக்க டார்க் காமெடி படம் என்று கூறப்பட்ட இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை பார்ப்போம்
 
விஜய்சேதுபதியின் தாத்தாவும், அப்பாவும் டான் ஆக இருந்து சொத்தை தொலைத்தவர்கள். அதேபோல் விஜய்சேதுபதியும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக அவரை அப்பாவியாக வளர்த்து வருகிறார் சரண்யா. ஆனால் ஒரு கட்டத்தில் எதிர்பாராத வகையில் டான் ஆகிவிடும் விஜய்சேதுபதியிடம், தாத்தாவும், அப்பாவும் இழந்த தியேட்டரை மீட்க வேண்டும் என்று சரண்யா கூறுகிறார். தியேட்டரை மீட்க வேண்டும் என்பதற்காக பாரீஸில் இருக்கும் சாயிஷாவை கடத்துகிறார் விஜய்சேதுபதி. தியேட்டரை மீட்பதற்கும் சாயிஷாவை கடத்துவதற்கும் என்ன சம்பந்தம்? தியேட்டரை மீட்டினாரா? என்பதுதான் இந்த படத்தின் கதை
 
இதற்கு முன்னரே 'நானும் ரெளடிதான்' படத்தில் டான் ஆக விஜய்சேதுபதி நடித்திருந்தாலும், அதன் தாக்கம் சிறிதும் இல்லாமல் வித்தியாசமான கெட்டபுடன் டான் ஆக வருகிறார் விஜய்சேதுபதி. குறிப்பாக ஒரு டான் எப்படியெல்லாம் கஞ்சனாக இருப்பார் என்பதை காண்பிக்கும் நடிப்பு சூப்பர். பாரீஸில் யோகிபாபுவுடன் சேர்ந்து அவர் அடிக்கும் கூத்து, பாரீஸ் போலீசிடம் சிக்காமல் சாயிஷாவை கடத்துவது என விஜய்சேதுபதி படம் முழுவதும் புகுந்து விளையாடியுள்ளார்.
 
சாயிஷாவின் முகம் தமிழுக்கு ஏற்றவாறு இல்லாததால் ஒரு அன்னியோன்யம் தெரிகிறது. பாடல்களில் நன்றாக டான்ஸ் ஆகும் சாயிஷா, நடிப்பில் சுமார்தான். இருப்பினும் கிளைமாக்ஸில் தனது தந்தையிடம் போனில் பேசும் காட்சியில் மட்டும் சாயிஷாவின் நடிப்பு ஓகே ரகம்
 
இனி யோகிபாபு இல்லாமல் தமிழ் சினிமா காமெடி இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட உருவாகிவிட்டது. ஹீரோ போலவே யோகிபாபுவின் எண்ட்ரியிலும் தியேட்டரில் கைதட்டல் கிடைக்கின்றது. ஒரு கஞ்ச டானிடம் மாட்டிக்கொண்டு சாப்பாடு கூட இல்லாமல் அவர் புலம்பும் ஒவ்வொரு காட்சியும் காமெடியின் உச்சம்
 
சுரேஷ்மேனன் ஒருசில காட்சிகளில் தோன்றினாலும் பணக்கார திமிரை வெளிப்படுத்துகிறார். அதேபோல் ராதாரவி ஒரே காட்சியில் வந்தாலும் மனதில் நிற்கிறார். விஜய்சேதுபதி படம் என்றால் மடோனா ஒரு காட்சியிலாவது இருக்க வேண்டும் என்ற செண்டிமெண்ட்டுக்காக அவரது கேரக்டர் திணிக்கப்பட்டுள்ளது.
 
சித்தார்த் விபின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. ஆனால் பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பாரீஸ் நகரின் முழு அழகை டட்லியின் கேமிரா தெளிவாக விளக்குகிறது.
 
இயக்குனர் கோகுலின் திரைக்கதையில் துளி கூட லாஜிக் இல்லாதது ஏமாற்றமாக இருந்தாலும் காமெடி படத்தில் லாஜிக் தேவையில்லை என்பதால் அதனை ஒரு பெரிய குறையாக எடுத்து கொள்ள முடியாது. ஆரம்பம் முதல் முடிவு வரை தியேட்டருக்கு வருபவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்று கோகுல் எடுத்து கொண்ட முயற்சியில் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது. எதிர்பாராத கிளைமாக்ஸ் படத்திற்கு வலு சேர்க்கின்றது.
 
மொத்தத்தில் முழுக்க முழுக்க காமெடி பிரியர்களுக்கு இந்த படம் பிடிக்கும்
 
ரேட்டிங்: 3.5/5

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் ரூ. 6.28 கோடி காணிக்கையை அள்ளிய திருப்பதி ஏழுமலையான் கோயில்