திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை, தமிழகத்தில் பெரியார் சிலை ஆகியவை சேதப்படுத்தப்பட்டதை அடுத்து உத்தரபிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து அங்கு லெனின் சிலை அகற்றப்பட்டது. இதனால் அங்கு பாஜக மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் மோதல் ஏற்பட்டு கலவரம் நடந்தது. அதைத்தொடர்ந்து ஹெச்.ராஜா நேற்று தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இதற்கு தமிழக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். நேற்று இரவு திருப்பத்தூரில் பெரியார் சிலையை சேதப்படுத்த முயன்ற பாஜக பிரமுகரை அப்பகுதி மக்கள் கட்டிவைத்து அடித்தனர். இந்நிலையில் தற்போது அம்பேதகர் சிலை சேதப்படுத்தப்பட்ட செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் இன்று அதிகாலை அடையாள தெரியாத நபர்களால் அம்பேதகர் சிலை உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தலித் சமூக மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். சிலையை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதிய சிலை அமைக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.