Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? பொன்னியின் செல்வன் கதையும், உண்மையும்..!

Ponniyin Selvan
, செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (13:34 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஆதித்த கரிகாலன் கொலை குறித்த வரலாறை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

1950களில் அமரர் கல்கி எழுதி வாரத் தொடராக வெளியான நாவல் பொன்னியின் செல்வன். சுமார் மூன்றரை ஆண்டுகாலம் 2500 பக்கங்கள் 5 பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வனை இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாக படமாக எடுத்துள்ளார். பாதி உண்மையான கதாப்பாத்திரங்களும், மீதி புனைவு கதாப்பாத்திரங்களும் கலந்த இந்த கதை தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


முக்கியமாக இந்த கதையின் முக்கிய கதாப்பாத்திரமான ஆதித்த கரிகாலன் கொலை குறித்த தகவல்கள் இப்போதும் மர்மமாகவே இருந்து வருகின்றன. பொன்னியின் செல்வன் நாவல் உண்மை சம்பவங்கள் மீது கட்டமைக்கப்பட்ட வரலாற்று புனைவு கதை என்பதால் உண்மையும், புனைவும் எப்படி இருக்கின்றன என்று பார்க்கலாம்.
webdunia


பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலனை கொல்ல வேண்டும் என்ற வேட்கையுடன் நந்தினி என்ற கற்பனை கதாப்பாத்திரத்தை கல்கி உருவாக்கி இருப்பார். இதுமட்டுமல்லாமல் ஆதித்த கரிகாலனை கொல்ல பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளும் நந்தினிக்கு துணையாக இருப்பதாக சொல்லப்பட்டிருக்கும். இதுதவிர பளுவேட்டரையர்கள் மற்றும் சில சிற்றரசர்களும் ஆதித்த கரிகாலன் முடிசூட கூடாது என்று சதியில் இருப்பார்கள்.

இப்படி கதையில் ஆதித்த கரிகாலனுக்கு எதிராக பலரும் சதியில் இருந்ததால் யார் ஆதித்த கரிகாலனை கொன்றார்கள் என்பது கதை முழுவதும் பெரும் ரகசியமாகவே நீடிக்கும். உண்மை வரலாற்றிலுமே இந்த மரணம் மர்மமாகதான் நீடிக்கிறது.
webdunia


சோழர்கள் குறித்த வரலாற்று நூலை எழுதிய நீலகண்ட சாஸ்திரி ஆதித்த கரிகாலனை கொல்ல ஆட்களை ஏவியது அவரது சித்தப்பா மதுராந்தகன்தான் என்ற ரீதியில் தனது யூகத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த யூகத்திற்கு வலு சேர்க்கும் விதமாக 16 ஆண்டு காலம் ஆட்சி செய்த மதுராந்தகன், ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள் குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்ததையும் மேற்கோள் காட்டுகிறார். ராஜராஜசோழன் அரியணை ஏறிய பின் தான் கொலையாளிகளை நாடு கடத்தினார் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் தரும் செய்தி.

ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் சிலர் இந்த கூற்றை மறுக்கிறார்கள். ஏனென்றால் திருவாலங்காடு செப்பேட்டில் கிடைத்த தகவல்களில் ஆதித்த கரிகாலனின் மரணத்திற்கு பிறகு ராஜராஜ சோழனுக்கு முடிசூட்ட முடிவானதாகவும், ஆனால் ராஜராஜ சோழனே தனது சித்தப்பாவான மதுராந்தகருக்கு அரச பதவியை அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் மதுராந்தகர் சதி செய்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பது மற்ற சிலரின் கருத்து.
webdunia


இப்படியாக ஆதித்த கரிகாலன் கொலை குறித்த பல ஊகங்கள் நிலவும் நிலையில் உடையார்குடி கல்வெட்டு ஆதித்த கரிகாலரை கொன்றது இன்னார்தான் என பெயரோடு சொல்கிறது. உடையார்குடி கல்வெட்டின் படி ஆதித்த கரிகாலரை கொன்றவர்கள் சோமன், இருமுடிச்சோழ பிரமாதிராஜன், மலையனூரை சேர்ந்த தேவதாசக் கிரமவித்தன் மற்றும் ரவிதாசன் என்னும் பஞ்சவன் பிரமாதிராஜன்.


வரலாற்றில் ஆதித்த கரிகாலன் கொலையோடு சம்பந்தப்பட்டு நேரடியாக கிடைத்துள்ள பெயர்கள் இதுதான். இவர்களை ராஜராஜ சோழன் நாடு கடத்தியதாக செய்தி. இந்த நால்வரும் பொன்னியின் செல்வன் கதையில் முதலாம் வீரபாண்டியனை கொன்றதற்காக ஆதித்த கரிகாலனை கொலை செய்ய வந்தவர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பர். முதலாம் வீரபாண்டியனின் தலையை கொய்ததற்காக ஆதித்த கரிகாலனை ’வீரபாண்டியன் தலை கொண்ட பரகேசரிவர்மன்” என்று வரலாற்றில் போற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சிக்கலான வரலாறு மற்றும் புனைவுகள் நிறைந்த கதையை மணிரத்னம் படத்தில் எப்படி காட்சி படுத்தியிருப்பார் என்பதை காண வரலாற்று ஆசிரியர்களும், பொன்னியின் செல்வன் நாவல் வாசகர்களுமே ஆர்வமாய் காத்திருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’வல்லவன்’ படத்திற்கு பின் சிம்பு இயக்கும் படம்: ஹீரோ யார் தெரியுமா?