விஜய்சேதுபதி நடித்த '96' திரைப்படம் நேற்று அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டது. இதற்கு காரணமாக விஷால், '96' படத்தயாரிப்பாளருக்கு ரூ.1.5 கோடி பைனான்ஸ் வாங்கி கொடுத்ததாகவும், அந்த பணத்தை '96 ரிலீசுக்கு முன் செட்டில் செய்ய வேண்டும் என்று விஷால் கூறியதால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டு அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த விஜய்சேதுபதி, விஷாலிடம் அந்த ரூ.1.5 கோடி பணத்திற்கு தான் பொறுப்பு ஏற்பதாக ஒப்புக்கொண்ட பின்னர் காலை 8 மணி காட்சி திரையிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் விஷால் தற்போது மனம் மாறி அந்த பணத்திற்கு விஜய்சேதுபதி பொறுப்பு ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தானே அந்த பணத்தை '96' படத்தயாரிப்பாளரிடம் பெற்று கொள்வதாகவும், அதுவரை தானே அந்த பணத்திற்கு வட்டியும் கட்டிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பிரச்சினையில் இருந்து விஜய்சேதுபதி எந்த வலியும் இல்லாமல் வெளியே வர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், பொருளாதார ரீதியாக அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும், தற்போது வெளியாகியுள்ள அவரது படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றும் விஷால் தரப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.