ஆக்ஷன் படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் 8.3 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை நடிகர் விஷால் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஷால் நடித்து எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. ஸ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்பட இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தை ஓடிடி தளங்களுக்கு விற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் தங்களுக்கு சொல்லப்பட்ட கதையை சக்ரா படமாக எடுத்துள்ளதாக ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் சக்ரா பட விற்பனைக்கு தடை விதித்துள்ள நீதிமன்றம் செப்டம்பர் 30க்குள் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் கூறியுள்ளது.
விஷாலின் முந்தைய படத்தை தயாரித்த டிரைடெண்ட் நிறுவனம், இப்போது விஷால் மேல் வழக்கு தொடுத்துள்ளதற்கு பின்னணியில் ஒரு காரணம் உள்ளதாம். ஆக்ஷன் படத்தின் பட்ஜெட் அதிகமான போது தயாரிப்பாளர் ரவீந்தரன், விஷாலிடம் பட்ஜெட்டை குறைக்குமாறு கூறியுள்ளார். அப்போது விஷாலொ ‘நீங்கள் கவலைப்பட வேண்டாம். என் திரைப்படத்துக்கு தமிழ்நாடு திரையரங்கம் மூலமாகவே 20 கோடி ரூபாய் உங்களுக்கு வருமானம் வரும். அதற்கு நான் பொறுப்பு’ எனக் கூறியுள்ளார். ஆனால் வந்ததோ 11 கோடிதானாம், மீதி 9 கோடியை விஷால் தராததால் தான் இப்போது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்நிலையில் இது சம்மந்தமான வழக்கில் நஷ்டமான 8.29 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை நடிகர் விஷால் கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.