கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பழைய படங்கள் ரி ரிலீஸ் ஆகி ரசிகர்கள் இடையே ஆதரவைப் பெற்று வருகின்றன. இதில் உச்சபட்ச வெற்றியைப் பெற்றது விஜய்யின் கில்லி திரைப்படம். கடந்த ஆண்டு இந்த படம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரி ரிலீஸில் ஒரு படம் இவ்வளவு தொகை வசூலித்திருப்பது இதுவே முதல் முறை.
அதே போல ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பல படங்கள் ரி ரிலிஸாகி கணிசமான வசூலை ஈட்டி வருகின்றன. இதனால் பழைய சூப்பர் ஹிட் படங்கள் தற்போது ரி ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. இதனால் பெரிய படங்கள் ரிலீஸ் இல்லாத போது பழைய படங்கள் அதிகளவில் ரி ரிலீஸாகி வருகின்றன.
அந்த வகையில் இப்போது விக்ரம்- பாலா கூட்டணியின் கல்ட் க்ளாசிக் படமான சேது விரைவில் ரி ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சேது படம்தான் விக்ரம்முக்கு திரையுலகில் ஒரு திருப்புமுனையைத் தந்து அவரை முன்னணி நடிகராக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.