பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று அமலாக்கத்துறை முன் ஆஜரான பிறகு, தாம் விளம்பரம் செய்தது 'கேமிங் செயலிகள்' என்றும், 'சூதாட்ட செயலிகள்' அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் விஜய் தேவரகொண்டா செய்தியாளர்களை சந்தித்தபோது "நான் விளம்பரம் செய்த செயலிகள் முற்றிலும் சட்டப்பூர்வமானவை. அவற்றுக்கு அரசு அங்கீகாரம் உள்ளது. அவை ஜி.எஸ்.டி. மற்றும் டி.டி.எஸ். செலுத்துகின்றன. இந்திய கிரிக்கெட் அணி, ஒலிம்பிக், மகளிர் கிரிக்கெட் அணிகள், கபடி போன்ற பலவற்றிற்கு அவை ஸ்பான்சர் செய்கின்றன. இவை அனைத்தும் சட்டவிரோதமானவையாக இருக்க முடியாது" என்று அவர் மேலும் விளக்கினார்.
அமலாக்கத் துறையிடம் தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் விளக்கங்களை சமர்ப்பித்திருப்பதாகவும், எது சரி, எது தவறு என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 29 பிரபலங்களில் ராணா டகுபதி, மஞ்சு லக்ஷ்மி, நிதி அகர்வால், அனன்யா நாகல்லா போன்றோரும் உள்ளனர். ராணா டகுபதி, தனது படப்பிடிப்பு காரணமாக சிறிது கால அவகாசம் கேட்ட நிலையில், அவரும் மஞ்சு லக்ஷ்மியும் ஆகஸ்ட் 13 அன்று ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
இந்த விசாரணை, ஆன்லைன் மோசடி மற்றும் ஏமாற்றுதல் தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது. அமலாக்கத் துறை இந்த பிரபலங்களின் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் தடங்களை ஆய்வு செய்து வருகிறது.