‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டா, மணிரத்னம் படத்தில் நடிக்கவில்லை என்கிறார்கள்.
தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’, ஆந்திரா மற்றும் தெலங்கானா மட்டுமின்றி எல்லா இடங்களிலும் சக்கைபோடு போடுகிறது. அமெரிக்காவில் கூட இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை, பலத்த போட்டிகளுக்கு மத்தியில் நடிகர் தனுஷ் கைப்பற்றியிருக்கிறார்.
இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த விஜய் தேவரகொண்டாவுக்கு, பல்வேறு வாய்ப்புகள் வரிசைகட்டி நிற்கின்றன. அவருடைய நடிப்பைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆனவர்களில் மணிரத்னமும் ஒருவர். இருவரும் ஒரு படத்தில் இணைவதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மணிரத்னம் படத்தில் அவர் இல்லை என்கிறார்கள். வேண்டுமானால், மணியின் அடுத்த படத்தில் அவர் நடிக்கலாமே தவிர, இந்தப் படத்தில் நிச்சயமாக இல்லை கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாகச் சொல்கிறார்கள். இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, ஃபஹத் ஃபாசில், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.