மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் விடாமுயற்சி. அர்ஜுன், ரெஜினா கஸாண்ட்ரா, த்ரிஷா என பலர் நடித்துள்ள இந்த படம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து வந்த நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து படத்திற்காக காத்திருந்தனர். இந்நிலையில் படம் பொங்கலுக்கு வெளியாவதாக கூறி பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று விடாமுயற்சி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் முழுவதும் அஜித்குமார் அஜர்பைஜானில் கார் ஓட்டும் காட்சிகளும், ஆக்ஷன் காட்சிகளும் இது பக்கா ஆக்ஷனான படம் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளன. இதனால் இந்த டிரைலர் அதிகளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
இதையடுத்து வெளியான 14 மணிநேரத்தில் இந்த டிரைலர் கிட்டத்தட்ட 80 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் இந்த டிரைலர் 10 மில்லியன் வியூஸை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக அஜித் நடிப்பில் எந்த படமும் ரிலீஸாகாத நிலையில் விடாமுயற்சி படத்துக்காக ரசிகர்கள் ஆவலாகக் காத்துள்ளனர் என்பதும் இந்த வைரல் ஹிட்டுக்குக் காரணம் என சொல்லலாம்.