இடது பக்கம் சிக்னல் போட்டு விட்டு வலது பக்கமா வண்டிய ஓட்டுறது போல என மாமன்னன் படம் குறித்து விசிக பிரமுகர் வன்னி அரசு விமர்சனம் செய்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
இடது பக்கம் சிக்னல் போட்டு விட்டு வலது பக்கமா வண்டிய ஓட்டுறது போல, தேவர்மகன் படத்து கதைய சொல்லி தென் மாவட்டத்து பக்கம் திசை திருப்பி, மேற்கு மாவட்டம் பக்கம் தாக்குதலை தொடுத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள்.
தனித்தொகுதியான காசிபுரத்தில் (ராசிபுரம்) போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் அந்த கட்சியின் மாவட்டச்செயலாளர் முன் உட்காரக்கூட முடியாது. காரணம் தலித் என்பதால்.
அப்படிப்பட்ட தலித் சட்டமன்ற உறுப்பினரை சபாநாயகராக அறிவித்து, எல்லோரையும் எழுந்து நிற்க வைப்பது தான் கதை.
மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள். பன்றிகள், நாய்கள் என புதிய களத்துக்குள் மிரட்டி இருக்கிறார் இயக்குனர். தலித்களின் வலி, வேதனையை உள்வாங்கி நடித்திருக்கிறார் திரு. வடிவேலு அவர்கள். நடிகர் திலகம் இல்லாத குறையை திரு.வடிவேலு அவர்கள் போக்கியிருக்கிறார். சமூகநீதி பேசும் கட்சியிலும் சமூகநீதிக்காக போராட வேண்டியிருப்பதை திரு.உதயநிதி அவர்களை வைத்தே காட்டியிருப்பது இயக்குனரின் துணிச்சல் தான்.
எந்த சாதிய வன்மமில்லாமல் சமத்துவத்துக்கான அரசியலை பேசியிருக்கும் மாமன்னன் எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம். தலித் இளைஞர்கள் தனது தந்தை போல இருக்கமாட்டார்கள் சுயமரியாதையோடு எழுவார்கள் என்பதை திரு.உதயநிதி அவர்கள் எச்சரித்திருக்கிறார்.
ஒரேரத்தம் திரைப்படத்தில் தலித்தாக வாழ்ந்த தந்தை திரு.மு.க. ஸ்டாலின் பின்தொற்றி சமூகநீதி அரசியல் பேசியிருக்கிறார் மகன்.