சில வாரங்களுக்கு முன்னர் நடந்த ஒரு இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, இசை பெரிதா? பாடல் பெரிதா என்று பேச ஆரம்பித்து “சில இடங்களில் இசை உயர்ந்து நிற்கும்.. சில இடங்களில் மொழி உயர்ந்து நிற்கும். இதைப் புரிந்தவன் ஞானி. புரியாதவன் அஞ்ஞானி” என்று பேசினார். இது இளையராஜாவை மறைமுகமாக தாக்குவது போல இருப்பதாகக் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் வைரமுத்துவிடம் இப்போது இளையராஜா சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பியபோது “நான் எந்த மேடையிலும் சர்ச்சைகளை உருவாக்க வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் சர்ச்சைகள் உருவாக்கப்படுகின்றன. சர்ச்சைகளில் இருந்து நான் வெளியேறவே விரும்புகிறேன். ஆனால் காலம் சர்ச்சைகள் முடியவேண்டும் என நினைப்பதில்லை. சர்ச்சைகளை உருவாக்கி சமூகம் குளிர்காய விரும்புகிறது. நான் சர்ச்சைகளில் இருந்து விலகி தமிழோடு நிற்கிறேன்” எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் அதே மேடையில் வைரமுத்து தமிழ் சினிமாவில் தனது பாடல் வரிகள் படத்தலைப்புகளாக வைக்கப்படுவது குறித்து பேசியுள்ளார். அதில் “நீதானே என் பொன்வசந்தம், விண்ணைத் தாண்டி வருவாயா எல்லாம் என் பாடல் வரிகள். அதை தலைப்பாக்கியவர்கள் என்னிடம் சொல்லவோ, தொலைபேசி மூலமாக அனுமதி கேட்கவோ இல்லை. இதற்கு ஜெயகாந்தன் சொன்னதையே நான் சொல்கிறேன். இல்லாதவன் எடுத்துக் கொள்கிறான்” எனக் கூறியுள்ளார்.