Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை: தொண்டர்களுக்கு துரை வைகோ முக்கிய வேண்டுகோள்..!

vaiko son

Siva

, புதன், 29 மே 2024 (07:56 IST)
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதை அடுத்து தொண்டர்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று துரை வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அனைத்து விதமான பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில் இன்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து துரை வைகோ தனது கட்சி தொண்டர்களுக்கு கூறியிருப்பதாவது: 
 
இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் உடல் நலனை விசாரித்த அரசியல் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள் அனைவருக்கும் நன்றி..!
 
கழகப் பொதுச்செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் நேற்று முன்தினம் கால் தடுமாறி விழுந்ததில் இடது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
 
இந்தத் தகவலை அறிந்து, முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் என்னை அழைத்து தலைவர் உடல்நிலை குறித்து விசாரித்தார்கள். நாளை தலைவரை அறுவை சிகிச்சைக்குத் தயார்படுத்த இருப்பதால் அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாள் கழித்து வீடு திரும்பிய பிறகு வந்து சந்திப்பதாக முதல்வர் அவர்கள் தெரிவித்தார்கள்.  தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு பதற்றத்துடன் தலைவர் வைகோ அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்கள்.
 
தலைவர் வைகோ அவர்கள் தன்னுடைய அறுபதாண்டு கால அரசியல் பொதுவாழ்வில் நிறைய தியாகங்களை செய்திருக்கிறார். அரசியலில் இழந்தது அதிகம். ஆனால், தலைவர் அவர்கள் தன்னுடைய நேர்மையால், தியாகத்தால், கொள்கை உறுதியால், விடா முயற்சியால், போர்க்குணத்தால் தமிழர்களின் மனங்களில் நீங்கா இடத்தைப் பெற்றிருக்கிறார். அதனால் தான், அரசியல் எல்லைகளை கடந்து அவரின் மீது உள்ள உயர்ந்த மதிப்பால், அன்பால் தலைவர் நலம்பெற வேண்டும் என அனைவரும் தங்கள் விருப்பத்தை என்னிடம் அலைபேசி வாயிலாக பகிர்ந்து கொண்டார்கள்.
 
தலைவர் வைகோ அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளார்கள். சிறிய அறுவை சிகிச்சை தான். யாரும் பயப்பட வேண்டியது இல்லை. மருத்துவர்கள் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையே தலைவர் உடல்நிலை குறித்து சில விஷமிகள் தவறான செய்திகளை பரப்பி ஆதாயம் தேட அற்பத்தனமாக முயற்சிக்கிறார்கள். 
 
தலைவருக்கு எலும்பு முறிவால் ஏற்படும் வலியை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறார். 
எப்போதும் போல வழக்கமான உணவை எடுத்துக் கொள்கிறார்.  அவருக்கு மிகவும் பிடித்தமான டென்னிஸ் இப்பொழுது நடைபெறுகிற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளை ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் பார்க்கிறார்.  தொலைக்காட்சி செய்திகளை பார்த்து அவ்வப்போது தகவல்களை பரிமாறிக் கொள்கிறார். எனவே தலைவர் பற்றி வெளிவரும் எந்த செய்தியையும் புறந்தள்ளுங்கள்.
 
கழகத் தோழர்கள் உள்ளிட்ட தலைவரின் மீது அன்பு கொண்ட பலர் ஆர்வ மிகுதியிலும், கவலையிலும் தலைவரை நேரில் சந்திக்க வருகிறோம் என, என்னிடம் தெரிவித்து வருகிறார்கள். நம்முடைய வருகையால் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், பிற நோயாளிகளுக்கும் எந்தவித இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதால், யாரும் தலைவரை சந்திக்க வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
விரைவில் பூரண நலம் பெற்று தலைவர் வைகோ அவர்கள் இல்லம் திரும்புவார். அதன்பிறகு கழகத் தோழர்கள் அவரை சந்திக்கலாம். அதுவரை, நேரில் வருவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
 
தலைவர் வைகோ அவர்களின் மீது அக்கறையும், அன்பும் கொண்டு நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள், தலைவர் வைகோவின் சுவாச காற்றாக விளங்கும் மறுமலர்ச்சி சொந்தங்கள்  அனைவருக்கும் என் நன்றி.
 
Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்று வெயில் உக்கிரமாக இருக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை..!