தமிழ் வனிகா சினிமாவின் மைல்கல் படம் என்றால் அது ரஜினி நடித்த பாட்ஷா என்று சொல்வதில் மிகையில்லை. பாட்ஷாவுக்குப் பிறகு அதுபோல பல படங்கள் வெளியாகின. இந்தப்படம் அமிதாப் நடித்த இந்திப் படத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தை ஒரிஜினலை விட சிறப்பாக இயக்கி ரஜினியின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு சென்றவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.
இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் ரஜினிக்கு அரசியல் இமேஜை உருவாக்கியதில் இந்த படம் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. இந்த படத்தின் பாதிப்பில் அதன் பிறகு நூற்றுக்கணக்கான கமர்ஷியல் படங்கள் பல மொழிகளில் உருவாகின. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பாட்ஷா திரைப்படம் நாளை குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டும் ரி ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதிய பாடல் ஆசிரியர் வைரமுத்துவின் முகநூல் பதிவு இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் “பாட்ஷா படத்தின்
மறு வெளியீடு
சில தகவல்களைப்
பரிமாறுமாறு கூறுகிறது
"எட்டு எட்டா மனுஷ வாழ்வப்
பிரிச்சுக்கோ" என்றபாட்டு
அவசரம் கருதி
எட்டே நிமிடத்தில் எழுதப்பட்டது
"தங்க மகன் இன்று
சிங்க நடை போட்டு" என்றபாட்டு
ஆண் குரலுக்காக மட்டும்
அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு
ஜேசுதாசால் பாடப்பட்டுப்
பதிவு செய்யப்பட்டது
அதில்
ரெண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக என்ற வரியை
ரண்டு புறம் என்று
பாடியிருக்கிறார் பாடகர்
நான் எவ்வளவோ முயன்றும்
அதை மீண்டும்
திருத்த இயலவில்லை
அமெரிக்காவில் இருந்து
வைரமுத்து வரட்டும் என்று
பாராட்டு விழாவைத்
தள்ளி வைத்திருந்தார் ரஜினி
எம்.ஜி.ஆரின் உச்சம்
நாடோடி மன்னன்
ரஜினியின் உச்சம் பாட்ஷா
இந்த இரண்டு
வெற்றிப் படங்களிலும்
சம்பந்தப்பட்டவர் ஆர்.எம்.வீ
என்று பாராட்டினேன்
"இந்த நாட்டை
ஆண்டவனாலும்
காப்பாற்ற முடியாது"
என்ற சர்ச்சைப் பேச்சுப்
பேசப்பட்டதும் அங்கேதான்
ஆர்.எம்.வீரப்பனின்
அமைச்சர் பதவி
பறிக்கப்பட்டதும்
அதைத் தொடர்ந்துதான்
தமிழ்நாட்டின்
கலை அரசியலோடு
கலந்துபோன படம் பாட்ஷா
அதில்
எனக்குப் பிடித்தது
சண்டைக்குத் தயாராகும்முன்
ரஜினி சொல்லும் வசனம்
"உள்ளே போ"
இப்போது பார்த்தாலும்
நரம்பு முறுக்கேறி
இரும்பாகிவிடுகிறது
இதை ரஜினியிடமே சொல்லியிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.