தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கடந்த 45 ஆண்டுகளாக ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறார். இடையில் அவர் சில ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்டாலும் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. இப்போது அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் அவருக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கை 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸான அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கியது. இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறிய வேடத்தில்தான் நடித்திருந்தார். அதன் பின்னர் தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கத்தில் நடித்து அடையாளம் பெற்று, வில்லனாகி, ஹீரோவாகி, சூப்பர் ஸ்டானார். அதன் பின்னர் இதுவரையிலும் தனக்கு அடுத்தத் தலைமுறை நடிகர்கள் வந்தும் தனது சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
நாளை அவரது படமான கூலி பெரும் எதிர்பார்ப்புக்கும் மத்தியில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரும், அவருக்குப் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவருமான வைரமுத்து அவரை சந்தித்து வாழ்த்தியுள்ளார். இது சம்மந்தமாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் “50 ஆண்டுகள்
ஒரே துறையில்
உச்சத்தில் இருப்பது
அபூர்வம்
ரஜினி
நீங்கள் ஓர் அபூர்வ ராகம்
புகழும் பொருளும்
உங்கள்
உழைப்புக்குக் கிடைத்த
கூலி
தொடரட்டும்
உங்கள் தொழில்
நிலைக்கட்டும்
உங்கள் புகழ்
"இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது" என்று
முத்து படத்தில் எழுதிய
முத்திரை வரியால்
வாழ்த்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.