Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ் ஈழத்திற்கு சென்றவர் – மகேந்திரனுக்கு வைகோ புகழஞ்சலி !

தமிழ் ஈழத்திற்கு சென்றவர் – மகேந்திரனுக்கு வைகோ புகழஞ்சலி !
, செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (15:45 IST)
மறைந்த தமிழ்த் திரை முன்னணி இயக்குனர் மகேந்திரனுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அஞ்சலி செய்தியை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் ரஜினியை ஒரு நடிகராக அடையாளம் காட்டிய படமென்றால் அது முள்ளும் மலரும்தான்.  அது மகேந்திரன் இயக்கிய முதல்படமாகும். அதன்  பின்னர் உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கை கொடுக்கும் கை, பூட்டாத பூட்டுகள், நண்டு, கண்ணுக்கு மை எழுது, சாசனம் என மிகவும் குறைவான படங்களையே இயக்கினார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அட்லி இயக்கிய தெறி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சில நாட்களாக உடல்நலக் கோளாறால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார் அவருக்கு வயது 79.

அவரின் உடலுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் மகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த்திரை உலகில் யதார்த்த இயக்குநர் என வர்ணிக்கப்படும் இயக்குநர் மகேந்திரன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கல்லூரிக் காலத்திலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவர். 1978 ஆம் ஆண்டு வெளிவந்த 'முள்ளும் மலரும்' படம் மூலம் அறிமுகம் ஆனவர்.

தொடர்ந்து 'உதிரிப்பூக்கள்', 'ஜானி', 'கை கொடுக்கும் கை' உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை இயக்கியவர். ரஜினிகாந்துக்கும், இயக்குநர் பாலு மகேந்திராவுக்கும் மிகவும் பிடித்த இயக்குநர் என பெயர் பெற்றவர் மகேந்திரன். தமிழ்த் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். திரை உலகில் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்கியவர்.

அண்மையில் வெளிவந்த 'தெறி', 'பேட்ட', 'நிமிர்', 'பூமராங்' படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். வாழ்நாள் முழுவதும் எளிமையாகவே வாழ்ந்தவர். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அழைப்பின் பேரில் தமிழ் ஈழத்திற்குச் சென்று அவரைச் சந்தித்த பெருமை இயக்குநர் மகேந்திரனுக்கு உண்டு.

சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன், சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தப்பு கணக்கு போட்ட விஜய்: தளபதி 63 படப்பிடிப்பு நிறுத்தம்; படக்குழு எடுத்த அதிரடி முடிவு