சூர்யா வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக உள்ள வாடிவாசல் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். அதற்கடுத்தும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அதே போல வெற்றிமாறனும் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இருவரும் தங்கள் படங்களை முடித்த பிறகு வாடிவாசல் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூர்யா பாலா மற்றும் சிறுத்தை சிவா ஆகியோரின் படங்களை இயக்கிய பின்னரே வாடிவாசல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம். 2022 ஆம் ஆண்டு மே மாதம் ஆகிவிடும் என சொல்லப்படுகிறது.
ஆனாலும் அந்த படத்தின் வியாபார வேலைகளை தயாரிப்பாளர் தாணு தொடங்கிவிட்டார். இந்த படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் சேனலுக்கு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்துள்ளாராம். ஓடிடி உரிமைக்காக 50 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. திரையரங்கில் வெளியாகி பின்னர் ஓடிடியில் வெளியாகும் படம் ஒன்றுக்கு இவ்வளவு தொகையா என்ற ஆச்சர்யமே எழுந்துள்ளது. அதற்குக் காரணம் சூர்யாவின் ஓடிடி படங்களான சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகியவை அடைந்த வெற்றியே என சொல்லப்படுகிறது.